முல்லைத்தீவில்-காணாமல் ஆக்கப்பட்டோரின் படங்களை வீதியில் போட்டு ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10)தமது உறவுகளின் உரிமைகளை வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டமானது மாங்குளம் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

“எங்கே எங்கே உறவுகள் எங்கே” - “வேண்டும் வேண்டும் நீதிவேண்டும் சர்வதேசமே பதில் சொல்” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தங்கியவாறும் சர்வதேசத்தின் தீர்வை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுத்துள்ளர்.

யுத்தம் முடிவடைந்த நாள் முதல் இன்று வரை 12 வருடங்களாக தமது உறவுகளை தேடி போராடிவருகின்ற நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி முதல் வீதியில் அமர்ந்து தொடர்ச்சியான போராட்டத்தை ஆரம்பித்து இன்று 1737 ஆவது நாளாகவும் போராடி வருகின்றனர்
இந்நிலையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் சிறிலங்கா இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள், யுத்த காலங்களில் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் மற்றும் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் என பல்வேறு வழிகளில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியே இந்த தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பல ஆண்டுகளாக போராடிவரும் மக்கள் உள்நாட்டில் தமக்கு எந்த தீர்வையும் தராது எனவும் சர்வதேசமே தமக்கான தீர்வை தர வேண்டும் எனவும் தமது உறவுகளின் உரிமைகளை உறுதிப்படுத்துமாறும் கோரி சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று தமது உறவுகளின் உரிமைகளை வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை