“நாங்கள் சுதந்திரம் இல்லாத நாட்டிலே வாழ்கின்றோம் என்பதை பெப்ரவரி 4 ஆம் திகதி உலகத்துக்கு எடுத்துக்காட்டும் ஒரு நடவடிக்கையாக குருந்தூர்மலைக்கு அதிகாலை செல்வோம்” என்று அழைப்பு விடுத்திருந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணன் அபிரகாம் சுமந்திரன்.
‘குருந்தூர்மலைக்கு செல்வதற்குத் தடையேதும் இல்லை என உச்ச நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் குறித்து பரிசீலிக்க குருந்தூர்மலை செல்லவுள்ளோம். தடுத்தால் அதனை நாம் எதிர்கொள்வோம்” – என்றும் அவர் இதன்போது கூறியிருந்தார்.
குருந்தூர் மலைக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்படலாம் அல்லது தடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் திட்டமிடப்பட்ட இந்த போராட்டத்தில் அவ்வாறு தடுக்கப்பட்டிருந்தால் சுதந்திரம் இல்லாத நாட்டில் வாழ்கின்றோம் என்பதை உலகுக்கு காட்டியிருக்கலாம் என்ற போராட்டக்காரர்களின் திட்டம் சரியானதுதான்.
மாறாக அங்கு சென்று வருவதற்கு அனுமதிக்கப்பட்டால், சுதந்திரம் உள்ள நாட்டில் வாழ்வதாக அல்லவா அர்த்தப்படும் என்பதை சட்டத்தை மாத்திரம் மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்யும் நமது தலைவர்கள் அறியாததல்ல.
அவர்கள் எதிர்பார்த்ததுபோல எந்தவித எதிர்ப்பும் இன்றி எழுபத்திஐந்து ‘போராளிகள்” குருந்தூர்மலைக்கு வெற்றிகரமாக சென்று திரும்பிவிட்டனர்.
இப்போது, சுதந்திரம் உள்ள நாடாகியிருக்கின்றது இலங்கை. எந்தவித எதிர்ப்பும் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை.
அதைவிட முக்கியமான இன்னுமொரு விடயத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.
எழுபத்திநான்காவது சுதந்திரதினத்தை நமது தலைவர்கள் மிக சிறப்பாக எழுபத்திநான்கு பேருடன் குருந்தூர் மலைக்கு சென்று இலங்கையின் சுதந்திரத்திற்கு சான்றுபகிர்ந்துள்ளதையும் நாம் கவனத்தில் எடுக்கவேண்டும்.
ஒரு ‘பலம்பொருந்திய” கட்சி அதுவும் எழுபது வருடங்களுக்கு மேல்பட்ட அரசியல் பாரம்பரியத்தைக் கொண்ட கட்சியின் ஒருபோராட்டத்தில் எழுபத்திஐந்து பேரை மாத்திரமே தங்களால் திரட்ட முடியும் என்பதையும் வெளிச்சம்போட்டுக்காடியிருக்கிறார்கள்.
உள்ளுர் பொறிமுறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று இந்தப் போராட்டத்தை முடித்துவைத்தபோது அதன் ஏற்பாட்டாளரான சுமந்திரன் எம்.பி. தெரிவித்திருந்தார்.
இப்படித்தான் அரசியல்ரீதியாக தீர்க்கப்படவேண்டிய பிரச்னைகளை எல்லாம் நீதிமன்றங்களின் ஊடாக தீர்க்க முயல்வதும்.
எந்த உள்ளுர் பொறிமுறையில் நம்பிக்கை இல்லை என்று அவர் கூறுகின்றாரோ, அதே பொறிமுறையிலேயே கன்னியா வென்னீரூற்று ஆலய பிரச்னையை தீர்க்கமுயன்று உள்ளுர் நீதிமன்றை நாட்டியவரும் இவர்தான்.
அவர் நம்பிய உள்ளுர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வேறு விதமாக இருந்திருந்தால், வெந்நீருற்று ஆலயப் பிரச்னை முற்றுப்பெற்றிருக்கும்.
அரசாங்கம் இன்று வடக்கு கிழக்கு இணைப்பிற்கு நீதிமன்றத் தீர்ப்பை துணைக்கு இழுப்பதுபோல, வெந்நீரூற்று பிரச்னைக்கும் அரசு முற்றுப்புள்ளி வைத்திருக்கும்.
எல்லாவற்றையும் சட்டத்தரணி மூளைகள்- அதே பார்வையில் சிந்திப்பதுதான் இன்று நமது முக்கிய பிரச்னை என்பதை நமது அரசியல் தலைவர்கள்- சிந்திக்கவேண்டும்.
அப்படி சிந்திக்க முடியாது ஏனெனில் நமது அரசில் தலைமைகளே இந்த சட்ட ‘மேதை”களிடம்தானே இருக்கின்றது.
எனவே இதுகுறித்து சிந்திக்கவேண்டியவர்கள் நாம்தான். அதாவது மக்கள் மட்டும்தான்.
ஊர்க்குருவி
