மட்டக்களப்பில் நீர் வெட்டு - உள்ளூராட்சி சபைகள் தயாராக இருக்க வேண்டும் – ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் வேண்டுகோள்.!

"​எல் நீனோ"காலநிலை மாற்றம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவி வரும் கடுமையான வரட்சியினால், உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது. 

இதன் காரணமாக, மாவட்டத்தில் நாளை  (22.08.2026)ஆம் திகதி முதல் நாளாந்தம் நீர் வெட்டை அமல்படுத்த நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.

​இந்த அசாதாரண சூழ்நிலையினால் ஏற்படவுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள மட்டக்களப்பில் உள்ள உள்ளூராட்சி சபைகள் உடனடியாக தயாராக வேண்டும் என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

​உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் குறைந்திருப்பதால், தொடர்ச்சியாக நீரை வழங்குவது சாத்தியமற்றது என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார். 

இதனால், ஆகஸ்ட் 22 முதல் தினமும் முற்பகல் 10:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை 4 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமலில் இருக்கும்.

​பாதிக்கப்படும் பகுதிகள்....

செங்கலடி, வாழைச்சேனை, ஏறாவூர், மயிலம்பாவெளி, தன்னாமுனை, மட்டக்களப்பு நகரம், காத்தான்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் வாழும் பொதுமக்களின் நாளாந்த தேவைகள் இதனால் கடுமையாக பாதிக்கப்படும்.

​நீர் வழங்கல் சபையின் நீரை நம்பியுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சிகளும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

​நிலைமை வழமைக்கு திரும்பும் வரை நீரைச் சேமித்து, சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், குடிநீர் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்கு கிணறுகள் மற்றும் குழாய் கிணறுகளைப் பயன்படுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

​படுவான்கரை பகுதியில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளூராட்சி சபைகளால் வழங்கப்படும் நீர் போதுமானதாக இல்லாத சூழலில், அரசாங்கம் வருடாந்தம் வழங்கும் வரட்சி நிவாரண நிதியையும் நிறுத்தியுள்ளது. 

இதனால் நிலமையை சமாளிக்க அரசாங்கம், அரச திணைக்களங்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இணைந்து பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதியது பழையவை