மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி பிரதேசத்தில் (21.09.2026)காலை இடம்பெற்ற காட்டு யானை தாக்குதலில் நான்கு பிள்ளைகளின் தந்தையான 60 வயதுடைய ஞானமுத்து மனோகரன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
காலை வழக்கம்போல் வீட்டிலிருந்து தனது வயல் வேலைக்காகச் சென்று கொண்டிருந்தபோதே, அவர் திடீரென காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் மரண விசாரணை அதிகாரிகளும் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கொதிப்பு மற்றும் போராட்டம்:
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இது குறித்து பலமுறை வனவிலங்கு அதிகாரிகளுக்குப் புகாரளித்தும் அவர்கள் எந்தவித உரிய நடவடிக்கையும் எடுக்காமல் அசமந்தப் போக்குடன் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி பிரதேச மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் நடந்த இடத்திலேயே பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், "இனியும் அப்பாவி மனித உயிர்கள் பலியாவதற்கு முன், யானை - மனித மோதலுக்கு நிரந்தரத் தீர்வைக் கண்டறிய வேண்டும்" என உரக்கக் குரலெழுப்பினர்.
இச்சம்பவம் குறித்து வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.