காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மனிதப் பாவனைக்கு உகந்ததற்ற பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த முறைப்பாடுகளையடுத்து, பிரதேச சபைத் தவிசாளர் எஸ். பாஸ்கரன் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் மூலம் அப்பொருட்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன.
பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தரமற்ற பழங்கள் மற்றும் உணவுகள் விற்பனை செய்யப்படுவதாகத் தவிசாளருக்கு முறைப்பாடுகள் கிடைத்தன.
இதனையடுத்து உடனடி நடவடிக்கை மேற்கொண்ட தவிசாளர் எஸ். பாஸ்கரன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் களமிறங்கி பரிசோதனைகளை முன்னெடுத்தார்.
இதன்போது, மனிதப் பாவனைக்கு உகந்ததற்ற நிலையில் காணப்பட்ட பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை, சம்பந்தப்பட்ட வியாபாரிகளைக் கொண்டே உடனடியாக அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
பொதுமக்களின் சுகாதாரத்தையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் நோக்கில் இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் எனக் குறிப்பிட்ட பிரதேச சபை நிர்வாகம், இனிவருங் காலங்களிலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கும்பட்சத்தில் உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சுகாதாரத்திற்குப் பாதிப்பான முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைக் அவதானித்தால், அது குறித்து உடனடியாக உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.