மன்னார் பகுதியில் இயங்கி வரும் உணவகங்களில் அடுத்தடுத்து சுகாதாரச் சீர்கேடுகள் இடம்பெற்று வரும் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.
மன்னார் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட மூன்றாம் பிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் இன்று (29.09.2026) வாங்கிய வடையில் வெட்டுக்கிளி ஒன்று காணப்பட்டுள்ளது.
வாங்கப்பட்ட வடையை உண்ண முற்பட்ட போதே அதற்குள் வெட்டுக்கிளி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (28) மன்னார் நகர்ப் பகுதியில் வாங்கப்பட்ட முட்டை ரொட்டி ஒன்றில் இரும்புக் கம்பித் துண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து இன்றைய தினமும் உணவில் வெட்டுக்கிளி கண்டெடுக்கப்பட்டுள்ளமை மன்னாரில் தொடரும் உணவக சுகாதாரச் சீர்கேட்டை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
இச்சம்பவங்களை அடுத்து, மாந்தை மேற்கு பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் இது குறித்து உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் மன்னார் மாவட்டத்தில் இயங்கும் உணவகங்களின் உணவுத் தரம் மற்றும் சுகாதார நிலையை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து, பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க முறையான நடைமுறைகளை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.