இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதன்மை பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் அக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அரசு வங்கி ஒன்றில் 100 இலட்சம் ரூபாய் (10 மில்லியன்) நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், லஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாட்டியங்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று ( 07.10.2026) ஆம் திகதி காலை கிருலப்பனையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
'சிரிலியா சவிய' தொண்டு நிறுவனத்தின் கணக்குகள் மற்றும் அரசு வங்கி நிதியைக் கையாண்டதில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
கைதைத் தொடர்ந்து, லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதவான், வழக்கை எதிர்வரும் அக்டோபர் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததோடு, அதுவரை ஷிரந்தி ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இலங்கையில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து முன்னணி அரசியல் குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், முன்னாள் முதன்மை பெண்மணியின் இந்தக் கைது நடவடிக்கை நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.