மூதூரில் மோட்டார் சைக்கிள் விபத்து - 17 வயது இளைஞன் உயிரிழப்பு - மற்றொரு இளைஞன் காயம்!

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில், மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – லொறி விபத்தில் 17 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு இளைஞர் காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து சனிக்கிழமை (24.10.2026)ஆம் திகதி  இரவு, மூதூரிலுள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மூதூர் – ஆலிம்சேனையைச் சேர்ந்த நளிபுத்தின் முகம்மது நசீத் (17) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த லொறியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு, லொறியின் சில்லில் சிக்குண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 17 வயதுடைய இளைஞர் காயமடைந்த நிலையில், மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டு, மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிள் செலுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இது தொடர்பான மேலதிக விபரங்கள் அதிகாரபூர்வ விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை