கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 24 மணி நேர CT ஸ்கேன் சேவை.!

அம்பாறை மாவட்டம், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் (BHKN) 24 மணி நேரமும் தொடர்ச்சியாக CT ஸ்கேன் பரிசோதனைச் சேவை வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணம் முழுவதும் உள்ள நோயாளர்களுக்கு விரைவான நோய் கண்டறிதல் மற்றும் உரிய சிகிச்சைத் தீர்மானங்களை மேற்கொள்ளும் நோக்கில் இச்சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் மூலம் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த பல வைத்தியசாலைகளின் நோயாளர்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

அந்தவகையில், அம்பாறை மாவட்டத்திலுள்ள அம்பாறை, நிந்தவூர், சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்துவில் மற்றும் திருக்கோவில் ஆகிய வைத்தியசாலைகளில் இருந்து வரும் நோயாளர்களுக்கும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள களுவாஞ்சிக்குடி மற்றும் வாழைச்சேனை வைத்தியசாலைகளின் நோயாளர்களுக்கும் இச்சேவை வழங்கப்படுகிறது.

மாதந்தோறும் சுமார் 550 முதல் 600 வரையான நோயாளர்களுக்கு CT ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக, 24 மணி நேரமும் இச்சேவை கிடைப்பதால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு உடனடியாக CT ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொண்டு, நோயின் தன்மையை விரைவாகக் கண்டறிந்து உரிய சிகிச்சைகளை வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தரமான, பாதுகாப்பான மற்றும் அனைவருக்கும் இலகுவில் கிடைக்கக்கூடிய சுகாதார சேவைகளை வழங்குவதில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை