ஏழு வயதில் அகதியாகத் தமிழகம் வந்த இலங்கை இளைஞர் - 30 ஆண்டுகளாகத் தனது அடையாளத்தைத் தேடும் அவலம்!

இந்தியாவில் அடையாள அட்டையின்றி வாழ்வாதாரமின்றித் தவிக்கும் இலங்கையைச் சேர்ந்த 37 வயதுடைய ஜோய் என்ற இளைஞர், தனக்கு அடையாள அட்டை வழங்குமாறு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனுவொன்றைக் கையளித்துள்ளார்.

இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, கடந்த 1997ஆம் ஆண்டு தனது ஏழாவது வயதில் தந்தையுடன் மீன்பிடிப் படகில் சென்றிருந்தபோது, எதிர்பாராத விதமாக இந்தியாவின் ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்துள்ளார்.

இதன்போது பெற்றோர் இல்லாத நிலையில், இந்தியப் பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டு மண்டபம் இலங்கைத் தமிழர் அகதி முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பின்னர் சிறுவனாக இருந்த காரணத்தினால் ஆசிரமத்தில் வளர்க்கப்பட்டுள்ளார்.

வயது வந்த பின்னர் 2014ஆம் ஆண்டு மீண்டும் மண்டபம் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அடையாள அட்டை மற்றும் பெற்றோர் தொடர்பான விபரங்களைக் கோரியுள்ளனர்.

அவற்றை வழங்க முடியாத நிலையில், பல்வேறு சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், மீண்டும் முகாமில் தங்கவைக்கப்பட்டதாகவும், அங்கு அடையாள அட்டை வழங்கப்படாமல் அடிப்படை உணவு வசதிகள் மட்டுமே கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது பெற்றோரைத் தேடியும், இலங்கைத் தூதரகத்தின் உதவியை நாடியும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும், பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் வேலைவாய்ப்பைப் பெற முடியாமல் வாழ்வாதாரத்திற்காகப் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், தற்போது பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் தங்கியிருந்து கிடைக்கும் உணவை உண்டு வாழ்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும், சிலருக்குக் கால்பந்து விளையாட்டுப் பயிற்சி வழங்கி தனது அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
"என்னை இலங்கைக்கு அனுப்புங்கள் அல்லது இந்தியாவில் வாழ்வதற்கான அடையாள அட்டையை வழங்குங்கள்" என உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ள ஜோய், தனக்கு உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கியூ பிரிவு பொலிஸார், குறித்த இளைஞரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சிறுவயதில் இலங்கையிலிருந்து தமிழகத்திற்குச் சென்ற ஒருவர், சுமார் மூன்று தசாப்தங்களாகத் தனது அடையாளத்தையும் குடும்பத்தினரையும் தேடி அலைந்து வருவதாக வெளியாகியுள்ள இச்சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
புதியது பழையவை