அம்பாறை மற்றும் உகன பொலிஸ் பிரிவுகளில் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைத் திருடிய முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வர் அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான உருக்கப்பட்ட தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூலை மாதம் ஏசல பௌர்ணமி தினத்தன்று கொண்டுவட்டுவான் குளத்திற்கு அருகிலும், கடந்த ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி உகன பகுதியிலும் பெண்களின் தங்கச் சங்கிலிகள் இதே பாணியில் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், திருட்டில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் கொழும்பு - கடுவெல பகுதிக்குத் தப்பிச் சென்று பேருந்து சாரதியாகப் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை (12.10.2026) அம்பாறைக்குத் திரும்பிய அவர், 'அம்பாறை இன்' விடுதி அருகில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
நகைக்கடை ஊழியர்கள் சிக்கியது எப்படி?
கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், திருடப்பட்ட சங்கிலிகளை விற்பனை செய்ய இடைத்தரகராகச் செயற்பட்ட அம்பாறை நகரிலுள்ள தங்கக் கடை ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். அவரிடம் பெறப்பட்ட தகவலின் பேரில் கல்முனையிலுள்ள பிரபல தங்கக் கடையில் பரிசோதனை நடத்தப்பட்டது.
அங்கு உருக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு தங்கச் சங்கிலிகள் கைப்பற்றப்பட்டதுடன், அக் கடையில் பணிபுரிந்த இரு ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்ல மற்றும் சிரேஷ்ட அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி ஆகியோரின் வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் இச்சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.