இன்றையதினம் (07.10.2026)கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்ட 'பொது பல சேனா' (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடாத்தே ஞானசார தேரருக்கு ஆதரவு தெரிவித்து, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சிலரும், தேரர்கள் பலரும் இன்றையதினம் கொழும்பு நீதவான் நீதிமன்றம் முன்பாக ஒன்று திரண்டிருந்தனர்.
9 மாதச் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரர் சாதாரண உடையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகச் அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றிற்கு அறிவித்திருந்தனர்.
ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 2027 பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
எனவே, குறித்த மேல்முறையீட்டு மனு மீது இறுதி முடிவு எட்டப்படும் வரை தண்டனையை அமுல்படுத்துவதை இடைநிறுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
ஆயினும் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டின் அடிப்படையில், குறித்த தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதாக, கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இதன்போது அறிவித்தார்.
இதனைப் பரிசீலித்த நீதிமன்றம், வழக்கின் மேலதிக விசாரணைகளை 2027 பெப்ரவரி 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.