திருகோணமலை நீதிமன்றில் பரபரப்பு.!

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணையின்போது, குற்றவாளிக் கூண்டில் இருந்த மூவர் பிளேடினால் தங்களது கழுத்தில் வெட்டுக் காயங்களை ஏற்படுத்திய சம்பவம் இன்று (28.10.2026) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதிகளில் மூவரே இவ்வாறு தங்களுக்குத் தாங்களே காயங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் நீதிமன்ற வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கைக்குண்டு, துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது!

திருகோணமலை தலைமையகப் பொலிஸாரால் கடந்த திங்கட்கிழமை (26.10.2026) நிலாவெளி பகுதியில் வைத்து கைக்குண்டு மற்றும் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட ஐவரும் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, அவர்களில் மூவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முகேஸ், அஜித்திரன் மற்றும் ரம்ஸான் ஆகிய மூவரே தங்களுக்குத் தாங்களே காயங்களை ஏற்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் முகேஸ் என்பவருக்குக் கழுத்தில் ஏற்பட்ட காயம் ஆழமாக இருந்ததால் அதிகளவில் இரத்தம் வெளியேறி அவர் மயங்கி விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் சிகிச்சை!

சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்த மூவரும் திருகோணமலை வைத்தியசாலையின் விபத்துச் சேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

அவர்களுக்குத் தையல் போடப்பட்டு, தற்போது நலமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை