தென்மேற்குப் பகுதிகளில் வெள்ளம், மண்சரிவு ஏற்படக்கூடும்; மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டன.
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியிலும் மத்திய கிழக்குப் பகுதியிலும் நிலவிய தாழமுக்கம் தீவிரமடைந்து, பலமிக்க தாழமுக்கமாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தொகுதி மேற்கு நோக்கி நகர்ந்து, சூறாவளியாக வலுவடைவதுடன், தொடர்ந்து தீவிரமடைந்து மிகச் சக்திவாய்ந்த சூறாவளியாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூறாவளி மேற்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து, இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்துக்கும் விசாகப்பட்டினத்துக்கும் இடையில் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதற்கு வங்காளதேசத்தினால் முன்மொழியப்பட்ட ‘அர்ணாப்’ (Arnab) என்ற பெயர் சூட்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு நேரடித் தாக்கம் இல்லாவிட்டாலும் கனமழைக்கு வாய்ப்பு!
குறித்த தாழமுக்கத் தொகுதி இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 1,300 கிலோமீற்றர் தொலைவில் காணப்படுகின்றது.
இதனால் இலங்கைக்கு நேரடியான தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், நாட்டை ஊடறுத்து வீசும் காற்றின் காரணமாக அடுத்துவரும் சில தினங்களில் நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல மாகாணங்களில் பலத்த மழை எச்சரிக்கை!
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய, வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
குறித்த பிராந்தியங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்தின் பல பகுதிகளிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மணிக்கு 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று!
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மணிக்கு 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும்.
குறிப்பாக நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை!
மறு அறிவித்தல் வரை வங்காள விரிகுடாவின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்களுக்கு மீனவர்களும் கடல்சார் பணியாளர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களின் பல இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடற்பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையிலிருந்து மணிக்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பிராந்தியங்களிலும், மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் காற்றின் வேகம் மணிக்கு 60 - 65 கிலோமீற்றருக்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும்.
இதனால் குறித்த கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படக்கூடும்.
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் கடல் அலைகள் 2.0 - 2.5 மீற்றர் உயரம் வரை எழக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் கடல் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையை அடையக்கூடும் என்பதால் கடலில் ஈடுபடுவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
வெள்ளம், மண்சரிவு, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்.
மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் உத்தியோகபூர்வ எச்சரிக்கைகளைத் தொடர்ந்து அவதானித்து, அதற்கேற்ப செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
தகவல்: சிரேஷ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான கௌரவ கலாநிதி மொஹமட் சாலிஹீன்.