அஸ்வெசும நலன்புரி உதவிக்கு 9.91 இலட்சம் பேர் தெரிவு!கிராமப்புற பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றச்சாட்டு!

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், வறிய மற்றும் மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 991,800 பேர் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று (03.11.2026) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 214,636 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வறிய மற்றும் மிகவும் வறிய ஆகிய இரு பிரிவுகளின் கீழ் மொத்தமாக 14 இலட்சத்து 40 ஆயிரம் பேருக்கு நலன்புரி உதவிகளை வழங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அஸ்வெசும திட்டத்திற்காகக் கிடைக்கப்பெற்ற சுமார் 31 இலட்சம் விண்ணப்பங்களில், இதுவரை 23 இலட்சத்து 83 ஆயிரம் விண்ணப்பங்களின் மீளாய்வுகள் நிறைவடைந்துள்ளதாகவும், எஞ்சிய விண்ணப்பங்களின் மீளாய்வுகள் டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் நிறைவடையும் எனவும் தெரிவித்துள்ளார்.

தகுதியுடையவர்கள் தெரிவு செய்யப்படாதிருந்தால், தேவையான ஆவணங்களுடன் மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டனவா?

இந்நிலையில், அரசாங்கத்தின் இந்த அறிவிப்புக்கு மத்தியில், கிராமப்புறங்களில் மிகவும் வறுமையான சூழ்நிலையில் வாழ்ந்து வரும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பல அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறிப்பாக, குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் தனியாகச் சுமந்து கொண்டு, போதிய வருமானமின்றி அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கே பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் பெண்கள் பலர் இந்த உதவித் திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

உண்மையான வறுமை நிலையில் வாழும் குடும்பங்களை அடையாளம் காண்பதில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும், கிராமப்புறங்களில் வாழும் மிகவும் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எனவே, அஸ்வெசும பயனாளிகள் தெரிவு மற்றும் மீளாய்வுப் பணிகள் அரசியல் அல்லது ஏனைய செல்வாக்குகளுக்கு அப்பால், உண்மையான வறுமை நிலையை அடிப்படையாகக் கொண்டு நியாயமான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

புதியது பழையவை