மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்களுக்கு நீதி வழங்கக் கோரி, இன்று (02.11.2026) ஆம் திகதி திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தற்போதைய அரசாங்கமும் பொலிஸாரும் பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது மாவட்ட செயலகத்தைச் சுற்றி பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இப்போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், செ.கஜேந்திரன், அரிசாகிர் மௌலானா, மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம்.பாக்கியநாதன், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
மேலும், வடமாகாணத்திலிருந்து வருகைதந்த சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கள மக்களும் பண்ணையாளர்களுக்கு ஆதரவாகக் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
இதன்போது, "மக்களின் கோரிக்கைக்கு தீர்வு வழங்கு", "பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே", "வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்", "அபிவிருத்திக் குழுவின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்து", "மேய்ச்சல் தரை நிலம் எமக்கு வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டக்காரர்கள் தமது எதிர்ப்பையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தினர்.
மயிலத்தமடு – மாதவனைப் பகுதிகளில் இடம்பெறுவதாகக் கூறப்படும் சட்டவிரோதக் குடியேற்றங்கள் காரணமாக பண்ணையாளர்களுக்கும் அவர்களின் கால்நடைகளுக்கும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருவதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஏழு பண்ணையாளர்களை மாத்திரம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அழைத்து கலந்துரையாடியுள்ளார்.
எனினும், குறித்த கலந்துரையாடல் தமக்கு திருப்தியளிக்கவில்லை என அதில் பங்கேற்ற பிரதிநிதிகள் பின்னர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை வழிநடத்திய 11 பேருக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகச் செயற்பாட்டு ஒன்றியத்தின் இணைப்பாளர் அருட்பணி லுக்ரோன் பாதர் தெரிவித்துள்ளார்.
தனக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், சிறிநாத், சிவில் சமூகச் செயற்பாட்டு ஒன்றியத்தின் தலைவர் சிவயோகநாதன், பண்ணையாளர் சங்கத் தலைவர் நிமலன் மற்றும் விவசாயிகள் சம்மேளனத் தலைவர் மோகன் உள்ளிட்டோருக்கு எதிராகவே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, நீதிமன்றத் தடை உத்தரவைத் தொடர்ந்து கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவுக்கு வந்தது.
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும் என்ற பண்ணையாளர்களின் கோரிக்கை மீண்டும் ஒருமுறை இப்போராட்டத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.