மட்டக்களப்பு மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை நில விவகாரத்தில் போராட்ட அமைப்புகளின் கோரிக்கைகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய மாவட்ட அரசாங்க அதிபர் தனது பொறுப்பிலிருந்து நழுவியுள்ளதாகவும், மக்களால் ஜனநாயக முறைப்படி தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க மறுத்து, பொலிஸாரைக் கொண்டு வெளியேற்றியமை கண்டிக்கத்தக்கது எனவும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு முன்பாக, மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை நிலங்களில் இடம்பெறும் சட்டவிரோத விவசாய நடவடிக்கைகளை நிறுத்தி, அத்துமீறிய குடியேற்றங்களை அகற்றுமாறு கோரி கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள் இணைந்து முன்னெடுத்த போராட்டத்தின்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் நிரந்தரத் தீர்வை வழங்க அரசாங்க அதிபர் மறுத்ததுடன், மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்க மறுத்துள்ளதாக செ. நிலாந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களால் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க மறுத்து, பொலிஸாரைக் கொண்டு வெளியேற்றியதன் மூலம் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் ஜனநாயக ஆணை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
மக்களின் பிரதிநிதிகளுக்குரிய ஜனநாயக உரிமைகளும் அவமதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக விவசாயச் செய்கைக்கான விதைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாவட்டத்திலுள்ள கால்நடைகளை மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை நிலங்களுக்குக் கொண்டு செல்வது தொடர்பாக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு உள்ள போதிலும், அந்தப் பொறுப்பை நிறைவேற்றாமல் போராட்ட அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்க மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 14 இற்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும், தமிழ், முஸ்லிம் கால்நடை வளர்ப்பாளர் சங்கங்கள், விவசாய அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பண்ணையாளர் சங்கங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இதில் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதுடன், மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை நிலங்களில் அத்துமீறி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை வெளியேற்றுமாறு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாகும்.
அரசாங்கத்தின் பிரதிநிதியாகச் செயற்பட வேண்டிய மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மக்களின் ஜனநாயக ஆணையை மதித்து மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளார்.
ஆனால், பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க மறுத்து வெளியேற்றியமை ஜனநாயக விழுமியங்களுக்கு முரணானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சிறுபான்மை மக்களினதும் அவர்களின் பிரதிநிதிகளினதும் உரிமைகள் புறக்கணிக்கப்படுகின்றனவா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ள அவர், நீதிமன்றத் தீர்ப்புகளையும் அரச நிர்வாகத் தீர்மானங்களையும் நடைமுறைப்படுத்தாமல் கால்நடைப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
எனவே, மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை நில விவகாரத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட அரச நிர்வாகத் தீர்மானங்களையும் நீதிமன்றத் தீர்ப்பையும் நடைமுறைப்படுத்தி, கால்நடைப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என செ. நிலாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
– செ. நிலாந்தன்
ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர்