அம்பாறை மாவட்டம், கல்முனை ஆதார வைத்தியசாலை, தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/26 இல் பொதுத்துறைப் பிரிவில் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளமையைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நாளை (03.11.2026)) செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் ஜி. சுகுணன் தலைமையில் காலை 10.30 மணிக்கு வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இவ்விழா நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியசாலையின் சகல ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலைக் குழுவினர் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
விசேட அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக சுகாதார விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும், கௌரவ அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் திருமதி ஷகிலா இஸ்ஸதீன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் டி.ஜே. அதிசயராஜ், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் திருமதி தாகிரா சபியுடீன் மற்றும் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி அதிபர் வணக்கத்திற்குரிய அருட்தந்தை லெபோன் சுதன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
தேசிய மட்டத்தில் கிடைத்துள்ள இந்த உயரிய அங்கீகாரமானது, வைத்தியசாலைப் பணிப்பாளர் தலைமையிலான வைத்தியர்கள், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஊழியர்கள், வைத்தியசாலைக் குழுவினர் உள்ளிட்ட அனைவரினதும் கூட்டு முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்குத் தலைமைத்துவத்திற்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.
இந்தச் சாதனையானது எதிர்காலத்தில் வைத்தியசாலை மேலும் பல உயரிய சாதனைகளைப் படைப்பதற்கான உந்துசக்தியாக அமையும் என வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் ஜி. சுகுணன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் சாதனைக்குப் பங்களித்த வைத்தியசாலை நிர்வாகிகள், ஊழியர்கள், வைத்தியசாலைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.