வஹாபிசம் மற்றும் தீவிரவாத சித்தாந்தங்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதற்காக மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள், 28 மற்றும் 29 வயதுடையவர்கள், மட்டக்களப்பிலுள்ள காத்தான்குடி பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த 2020 நவம்பர் 21 ஆம் திகதி கட்டாரில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.
இவர்கள் கட்டாரில் தங்கியிருந்தபோது, வஹாபிசம் மற்றும் தீவிரவாத சித்தாந்தங்களை ‘ஒரு உம்மா’ என்ற வாட்ஸ்அப் குழு மூலம் பரப்பினர்.
பாரம்பரிய இலங்கை முஸ்லிம்களுக்கு முரணான ஒரு கோட்பாட்டை நிறுவ அவர்கள் அந்த சமூக ஊடக குழுவைப் பயன்படுத்தினர் என அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் சஹ்ரான் ஹாசிம் மற்றும் பிற தற்கொலை குண்டுதாரிகளின் உறுதிமொழி எடுக்கும் வீடியோவை இணையத்தில் வெளியிடுவதில் குறித்த 6 சந்தேக நபர்களும் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.
இஸ்லாமிய அரசின் (ஐ.எஸ்) சித்தாந்தத்தைப் படித்த குற்றம் சாட்டப்பட்டவர் நாடுகடத்தப்படுவதற்கு முன்னர் கட்டாரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டாரில் இருந்து நாடு கடத்தப்பட்ட 6 சந்தேக நபர்களும் இப்போது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ளனர்.
