தமிழரசுக்கட்சி இளைஞரணி உதவி செயலாளர் கடத்தல் குற்றச்சாட்டை பொலிஸார் நிராகரிப்பு

தமிழரசுக்கட்சியின் இளைஞரணியின் உதவி செயலாளரை வௌ்ளை வேனில் வந்த அடையாளந்தெரியாத நபர்கள் கடத்த முயன்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பதிவிட்ட குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கல்முனைப் பகுதியில் தமிழரசுக்கட்சியின் இளைஞரணியின் உதவி செயலாளரான நிதன்சனனை அடையாளந்தெரியாத நபர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் எனத் தெரிவித்து கடத்த முயன்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தமது டுவிட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் பதவிட்டிருந்தார்.

எவ்வாறாயினும் குறித்த வௌ்ளை வேன் மற்றும் நிதன்சனன் செலுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியன மோதி விபத்தொன்று கடந்த 17 ஆம் திகதி சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அன்றைய தினம் தமிழரசுக்கட்சியின் இளைஞரணியின் உதவி செயலாளர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

அத்துடன் குறித்த வௌ்ளை வேனில் பயணித்த நபர்கள்  மருதமுனைப் பகுதியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் நிலையத்தின் உரிமையாளர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விபத்தின் போது இரு தரப்புக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் அடிப்படையிலேயே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புதியது பழையவை