2002.02.22ஆம் திகதி சிறிலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே கையெழுத்தான போர்நிறுத்த ஒப்பந்தம்.!

இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் நோர்வே மத்தியஸ்தத்துடனான போர் நிறுத்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டு 24 வருடங்கள் இன்று நிறைவு பெறுகின்றது.

அன்றைக்கு எம்மிடம் இருந்த பலமும் அழுத்தம் கொடுக்கும் சக்தியும் அதே வடிவத்தில் இன்று இல்லை. ஆயினும் சர்வதேச தளத்தில் வேறு வடிவங்களில், புதிய வடிவங்களில் சிறிலங்காவிற்கான நெருக்கடியை கொடுக்கும் அழுத்த பொறிமுறைகள் எம்மால் பரீட்சிக்கப்பட்டு குறிப்பிடத் தக்க வடிவங்களில் வளர்ச்சி அடைந்து வருகின்றது. இது போதுமான அளவு முழுமை அடைந்து விட்டதா என்பது ஒரு கேள்வி குறி. தாயக மற்றும் புலம் பெயர் மக்களை வழி நடத்த முற்பட்டோர் தமது செயல்பாடுகளை, வளங்களை இம் மூலோபாய நகர்வுகளை நோக்கி குவியப்படுத்தினார்களா, பல்வேறு ஊடகங்கள் எம் மக்களின் கவனத்தினை சிதறடிக்காமல் தமது வளங்களை பயன்படுத்தினார்களா அல்லது மக்களை எந்த விடயம் அதிகம் ஈர்க்குமோ அதற்காக தம் வளங்களை மடை மாற்றுகின்றார்களா என்பது அடுத்த கேள்வி குறி. 

இவை அனைத்தையும் மீறி சில ஆக்கபூர்வமான செயல்பாடுகள் பலனளிக்க தொடங்கி உள்ளன என்பதனை அறிவுபூர்வமாக ஆராயும் தமிழ் தேசியவாதிகள் விளங்கி கொள்கின்றனர்.

எமது தேசத்தின் இருப்பை தக்க வைத்து பலப்படுத்தி முன்னேற தேவைப்படும் அரசியல் தீர்வுக்கு உரிய உத்திகள், சொல்லாடல்கள், மற்றும் எந்தெந்த கால கட்டத்தில் எந்தெந்த விடயங்களை சர்வதேச அழுத்தங்களை பாவித்து வென்றெடுக்க வேண்டும் போன்ற முக்கியமான விடயங்களை உள்ளடக்கிய வழி வரைபடம் ஒன்றின் அடிப்படையிலேயே பிரித்தானிய தமிழர் பேரவை செயல்பட்டு வருகின்றது. 

எம்மை தனிமைப்படுத்தி பலவீனமாக்கி ஒட்டு மொத்த தமிழர் தேசத்தினை செயலிழக்க செய்ய சிறிலங்கா தொடர்ந்து தன் அனைத்து வளங்களையும் பாவிக்கத் தான் செய்யும். ஆனால் நாம் இதனை தெளிவாகப் புரிந்து கொண்டு எம் உரிமை போராட்டத்தினை தமிழ் மக்களுக்கிடையில் மட்டுப்படுத்தாமல் சர்வதேசத்தின் முக்கிய சக்திகளை ஈடுபடுத்தி எம் அடைவு மட்டங்களை நோக்கி கட்டம் கட்டமாக முன்னேற வேண்டும்.

தமிழ் மக்களின் சட்டபூர்வமான அபிலாசைகளை பூர்த்தி செய்ய கூடிய தீர்வை கொண்டு வரும் சர்வதேச அழுத்தத்தை உருவாக்கும் சாதுரியமான நகர்வுகளை தமது நாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் உருவாக்க வேண்டும்.

புதிய உலக ஒழுங்கு பல்துருவமயப்பட்டது. முன்னரை போல ஒரு நாடு அல்லது ஒரு தரப்பு தனித்து நின்று சிறந்த ஒரு தீர்வை கொண்டு வரக் கூடிய நிலைமைகள் மிக குறைவாக உள்ளது.

1) பிரித்தானியாவின் வரலாற்று ரீதியான பங்கு, 2) பலமான ஒரு நடைமுறை நிலை அரசு (de facto state) கட்டமைப்பாக இயங்கி வந்த தமிழர் தேசத்தின் நிலைமைகளில் சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்த தலையிட்ட நோர்வே, 3) மற்றும் அதற்கான வலுவான ஏதுநிலைகளை உருவாக்கிய ஐரோப்பிய நாடுகள், 4) சக்தி வாய்ந்த நிலையில் இருந்த அமெரிக்கா, 5) ஜப்பான் போன்ற சக்திகளுடன் 6) சர்வதேச அரங்கில் குறிப்பாக உலகளாவிய தெற்கில் (Global south) முக்கியமான சக்தியாக விளங்கும் இந்தியாவின் வகிபாகம் என்பன முன்னர் சிங்கள தேசம் எப்படி தனக்கு சாதகமான முறையில் பயன்படுத்தியதோ, அதனை ஆராய்ந்து இன்றைய சூழ்நிலையில் எவ்வாறு தமிழர் தேசத்தின் நியாயபூர்வமான உரிமைகளை வென்றெடுக்க எம் ஆற்றலை ஒருங்கிணைக்க போகின்றோம்? 

முயற்சி திருவினையாக்கும். 
புதிய ஆண்டு இதில் முன்னேற்றங்களை கட்டியம் கூற வேண்டும்.
புதியது பழையவை