காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பாரிய போராட்டம்!

​வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து, இன்று (20.02.2026)ஆம் திகதி கிளிநொச்சியில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம், இன்றுடன் 16 ஆண்டுகளை (யுத்தம் முடிந்து) கடந்து, 3287 நாட்களாக எவ்வித தீர்வும் இன்றித் தொடர்வதை முன்னிட்டு இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

​போராட்டத்தின் போக்கு
​இன்று காலை 11 மணியளவில் ஏ-9 வீதி, நகர் பிள்ளையார் கோவில் முன்றலில் ஆரம்பமான இந்தப் போராட்டம், கிளிநொச்சி மாவட்ட காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) பிராந்திய கிளைக்கு முன்பாகச் சென்று தமது பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து பேரணியாகச் சென்ற உறவினர்கள், டிப்போ சந்திக்கு அருகில் உள்ள மீனாட்சி அம்மன் ஆலய முன்றலில் போராட்டத்தை நிறைவு செய்தனர்.

​"சர்வதேசமே, எமது கண்ணீருக்குப் பதில் என்ன?"
​போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் முன்வைத்த உருக்கமான கோரிக்கை 

​நீதி மறுக்கப்பட்ட 9 ஆண்டுகள்: "தள்ளாடும் வயதிலும் வீதியில் நின்று போராடுகிறோம். 400-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலேயே ஏக்கத்துடன் மரணித்துவிட்டனர்."

​அண்மையில் 'டித்வா' புயலால் ஏற்பட்ட அழிவுகளுக்கு உலக நாடுகள் காட்டிய அக்கறையை, முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபோதும், சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டபோதும் ஏன் காட்டவில்லை என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

​கடந்த 16 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த 5 அரசாங்கங்களும் குற்றவாளிகளைப் பாதுகாப்பதிலேயே குறியாக இருப்பதாகவும், எனவே உள்நாட்டு பொறிமுறையில் தமக்கு நம்பிக்கையில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

​வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச ரீதியான நீதி விசாரணை வேண்டும்.
​அரசியல் கைதிகள் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
​கடுமையான சட்டங்கள் நீக்கம் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) மற்றும் புதிதாக கொண்டுவரப்படவுள்ள PSTA ஆகியவற்றை நீக்க வேண்டும்.
​இராணுவ வெளியேற்றம்: வடக்கு-கிழக்கு பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்கள் மூடப்பட வேண்டும்.
​புதைகுழிகள் அகழ்வு: செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகளில் சர்வதேச நிபுணர்களின் நேரடித் தலையீடு அவசியம்.
​அச்சுறுத்தல் நிறுத்தம்: ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் மீதான புலனாய்வுத் துறையினரின் கெடுபிடிகள் நிறுத்தப்பட வேண்டும்.
வடக்கு-கிழக்கில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும்.
​தாயகத்தின் வளச் சுரண்டல் மற்றும் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
​"நாங்களும் இறப்பதற்கு முன்பாக, எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை சர்வதேச சமூகமாவது வெளிப்படுத்த வேண்டும்" என்பதே இந்த முதிய பெற்றோர்களின் இறுதி வேண்டுகோளாக உள்ளது.
புதியது பழையவை