மட்டக்களப்பு செட்டிபாளையம் மீனவர் கடற்படையினால் சித்திரவதை - மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு.!



அனுமதியற்ற மீன்பிடி வலையைப் பயன்படுத்தியதாகக் கூறி, மீனவர் ஒருவரை கடற்படை புலனாய்வுப் பிரிவினர் பிடித்து, இரண்டு மணித்தியாலங்கள் முழங்காலில் இருக்க வைத்து சித்திரவதை செய்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மீனவர் இன்று (08.04.2026) மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளார்.

​கடந்த ஞாயிற்றுக்கிழமை (05.04.2026) காலை, செட்டிபாளையம் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குறித்த மீனவரிடம், தடை செய்யப்பட்ட 'சுருக்குவலை'க்கு பயன்படுத்தப்படும் ஈயத் துண்டுகள் இருந்துள்ளன. இதன்போது, கல்லடி கடற்படை முகாமின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் சிவில் உடையில் அங்கு சென்று மீனவரைக்கைது செய்துள்ளனர்.

​தான் தவறு செய்ததை ஒப்புக்கொண்டு வலையை ஒப்படைத்த போதிலும், கடற்படையினர் அவரை விடுவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

​மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல்
​கைது செய்யப்பட்ட மீனவரை பொது இடத்தில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் முழங்காலில் இருக்க வைத்து, கடற்படையினர் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த மீனவரின் மனைவி, தனது கணவர் சித்திரவதை செய்யப்படுவதை அலைபேசியில் வீடியோ எடுத்தபோது, கடற்படையினர் அலைபேசியைப் பறித்து காட்சிகளை அழித்துள்ளதுடன், அவரையும் தகாத வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தியதாக மீனவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

​பாதிக்கப்பட்ட மீனவரின் குமுறல்
​பின்னர் களுதாவளை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். 


​"சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தப் பகுதியில் சுருக்குவலைகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் என்னை மட்டும் இலக்கு வைத்து கைது செய்ததுடன், நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் எனது பிள்ளைகள் பார்த்திருக்க என்னை முழங்காலில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர். 

இதனால் நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளேன். எனது பிள்ளைகள் அவமானத்தால் பாடசாலைக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்."

​தவறுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை விடுத்து, மனிதாபிமானமற்ற முறையில் தன்னைத் தாக்கிய கடற்படை அதிகாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்து, தனக்கு நீதி வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதியது பழையவை