ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சிறைக் காவலர்கள், ஜெயிலர்கள் உள்ளிட்ட சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (17.07.2026) ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

​சிறைச்சாலைக் கட்டமைப்பில் தற்போது எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு உடனடியாக எடுக்கப்பட வேண்டிய அவசர தீர்வுகள் குறித்து இச்சந்திப்பின் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
​குறிப்பாக, அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் அரங்கேறிய அசம்பாவிதம் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

​மேலும், சிறைச்சாலை அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் நலன்புரித் தேவைகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது விசேட கவனம் செலுத்தினார்.

நாட்டின் ஜனாதிபதி ஒருவருடன் நேரடியாகத் தங்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்குக் கிடைத்த முதலாவது சந்தர்ப்பம் இதுவெனக் குறிப்பிட்ட அதிகாரிகள், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பை வழங்கியமைக்காக ஜனாதிபதிக்குத் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

​இந்நிகழ்வில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார, சிறைச்சாலைகள் ஆணையாளர் (புனர்வாழ்வு) எஸ்.கே. பல்லெதென்ன, சிறைச்சாலைகள் ஆணையாளர் (செயற்பாடுகள் மற்றும் புலனாய்வு) ஏ.சி. கஜநாயக்க உள்ளிட்ட சிறைச்சாலைத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

​- ஜனாதிபதி ஊடகப் பிரிவு
புதியது பழையவை