ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் கடைசிநேர பேச்சுக்களில் ஈடுபடும் இலங்கை!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாருடன் இறுதிநேர பேச்சுக்களை நடத்தி, உடன்பாடு எட்டுவதற்கு இலங்கை முயன்று வருகிறது.

எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வில், இலங்கை தொடர்பில் மிகக் கடுமையான அறிக்கையொன்றை ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் சமர்ப்பிக்கவுள்ளார்.

இந்த அறிக்கை தொடர்பாக இறுதிநேர கலந்துரையாடல்களை நடத்த இலங்கை வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

“நாங்கள் அவரது அலுவலகத்துடன் சில விவாதங்களை நடத்தி வருகிறோம். அவர் எழுப்பிய விஷயங்களில் ஒருவித உடன்பாட்டை எட்ட முயற்சிக்கிறோம். நாங்கள் முறையான பதிலை வெளியிடுவோம்” என்று வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு இலங்கை அனுப்பி வைக்கும் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பதில் பகிரங்கப்படுத்தப்படுவதற்கு முன்பு பச்லெட் அம்மையாரின் அலுவலகத்துடன் ஒருமித்த கருத்தை எட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.




புதியது பழையவை