அருணா
விடுதலைப் புலிகளின் தியாகம்,வீரம், படைக்கட்டுமானம், மக்கள் கட்டமைப்புக்கள் முதலான பல்வேறு விடயங்களையும் குறிப்பிடுவோர் ஆளுமை,வினாடிக்குள் முடிவெடுக்கும் ஆற்றல் பற்றியும் உதாரணங்களுடன் விளக்கத் தவறுதில்லை.அதில் நிச்சயம் பரதனின் பெயர் இடம்பெறும்.
புலிகளின் குரல் நிறுவனத்தின் ஆண்டு விழா யாழ்.இந்துக்கல்லூரியின் குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஈழ நல்லூர் ஸ்ரீதேவி வில்லிசைக் குழு அக் காலத்தில் மிகப் பிரசித்தம்.சாம்சிவ. சோமாஸ்கந்த சர்மா தான் கதை சொல்லி. பிற்பாட்டுப் காரர்கள், மேலும் விளக்கம் கேட்க வினாத் தொடுப்போர் முதலான சகல அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. அக்காலத்தில் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி வந்த பொருளாதாரத் தடை பற்றிஅடுக்கடுக்காக கூறி வந்த சர்மா தொடர்ந்து `சவர்க்காரத்துக்கு தடை`என்று குறிப்பிட்டார். உடனே பிற்பாட்டுக்காரர் அப்ப ஊத்தை உடுப்புக்களை என்ன செய்யிறது ?என்று கேட்டார். இதற்கு சர்மா சொன்னபதில் அவரது மன அழுக்கை வெளிப்படுத்தியது. அப்போதைய ஆட்சியாளரான பிரேமதாசாவை கொச்சைப்படுத்தும் விதமாகவும் அவரது பரம்பரை குறித்து மறைமுகமாக கிண்டலடிக்கும் விதமாகவும் இருந்தது. இவரது பதிலின் அர்த்தத்தை பார்வையாளர்கள் கிரகிக்கும் முன்னரே மேடைக்குள் பிரவேசித்தார் பரதன். ஒலிவாங்கியை எடுத்து "இத்துடன் வில்லிசை நிகழ்ச்சி நிறைவு பெற்றது" என அறிவித்தார். மேடையில் இருந்தோர்,சபையினர்மத்தியில்பரபரப்பு. "மங்களம் பாடிவிட்டுப் போகிறோமே?" எனக் கேட்டனர் சர்மா தரப்பினர். "அதை நாங்களே பாடிக்கொள்கிறோம்; மேடையை விட்டு அகலுங்கள்“ என்ற பரதனின் கண்டிப்பான உத்தரவை மீறி எதுவும்செய்யமுடியவில்லை.
வினாடி கூட தாமதிக்காமல் பரதன் இந்த முடிவை எடுத்ததற்கு அவர் நிகழ்ச்சியை ஒழுங்கு படுத்தியதுடன் மட்டுமல்ல அதனைக் கிரகித்தபடியே இருந்துள்ளார் என்பது புலனாகிறது. எதிரியை விமர்சிப்பதென்றால் கூட பண்பு தவறக்கூடாது என்ற அறிவுறுத்தலை எப்போதும் பரதன் மனதில் வைத்திருந்தார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.பரதனின் நடவடிக்கை இயக்கத்தின் மீதான மதிப்பை மேலும் உயர்த்தியது.
***
விடுதலைப்புலிகளின் அமைப்பின் ஒலி .ஒளி ,புகைப்படக் கட்டமைப்பின் பிதாமகன் என்று பரதன் அவர்களைக் குறிப்பிடலாம். புலிகளின் குரல், நிதர்சனம் என்பனவற்றை உருவாக்கியத்துடன் குறும்பட உருவாக்கத்திலும் ஈடுபட்டார். அத்துடன் காசி அண்ணா. புதுவை அண்ணா முதலானோரின் பாடல்களை தென்னிந்தியாவின் பிரபல பாடகர்களை பாடவைத்து `களத்தில் கேட்கும் கானங்கள்` என்ற ஒலிப்பேழையாக வெளியிட்டார். முக்கியமான விடயம் தன்னுடன் நின்ற போராளிகள் தொழில் நுட்பத் துறையில் வல்லுனர் களாக உருவாக்கியிருந்தார். இன்றும் பலர் இயக்கத்தில் பழகிய இத்துறைகளை வாழ்வின் ஆதாரமாக கொண்டு உயர்ந்து விளங்குகின்றனர்.
யாழ்.மாவட்ட தளபதியாக விளங்கிய கிட்டு பரதனை ஊக்குவித்தவர்களில் முக்கியமானவர்.இன்னொரு விடயம் இயக்கத்தில் இணைந்த காலம் தொட்டு விலகிய காலம் வரை சொந்தப் பெயரிலேயே இவரை அனைவரும் அழைத்தனர். சுருக்க முடியாதளவு இவரது பெயரும் இருந்தது இதற்கு காரணம்.