வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இடம்பெறும் மணல் கழுவுதல் மற்றும் அகழ்வுத் திட்டத்தினை உடனடியாக நிறுத்துமாறும் மண்ணை வெளி பிரதேசங்களுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றும் பிரதேச மீனவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இன்று வியாழக்கிழமை மீன்பிடி துறைமுகத்தில் மண் ஏற்றப்பட்ட வாகனத்தை செல்ல விடாது தடுத்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மீன்பிடித்துறை முகங்கள் கூட்டுத்தாபனத்தின் மணல் கழுவுதல் மற்றும் அகழ்வுத் திட்டத்திற்கு அமைய மீன்பிடித் துறைமுக பிரதேசம், தோண்டப்படும் மண் அகழ்வினாலும் மண்ணைக் கழுவும் உப்பு நீர் மீண்டும் பிரதேசத்திற்குள் செல்வதாலும் எங்களது பிரதேசம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுவதால் மண் அகழ்வு நடவடிக்கையினையும் மண் கழுவும் வேலைத்திட்டத்தினையும் நிறுத்துமாறு கோரியே பிரதேச மீனவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் போது குறித்த இடத்திற்கு வருகைதந்த வாழைச்சேனை பொலிஸார் மண் அகழ்வில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பிரதேச மீனவர்களுடனும் கலந்தாலோசித்து வாகனத்தில் ஏற்றப்பட்ட இரண்டு மண் லோடுகளையும் செல்வதற்கு அனமதிப்பது என்றும் நாளை வெள்ளிக்கிழமை இரண்டு தரப்பினரும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்து மண் அகழ்வதா அல்லது நிறுத்தவதா என்ற முடிவுக்கு வரும் வரையில், மண் அகழ்வதோ அல்லது மண்ணை அவ்விடத்தில் இருந்து வேறு பிரதேசங்களுக்கு ஏற்றுவதோ இல்லை என்று பொலிஸார் தெரிவித்தன் பின்னர் அவ்விடத்தில் கூடிய மீனவர்கள் கலைந்து சென்றனர்.

