‘காசாவில் இருந்து ஒரு வாரத்தில் 3,000 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன’ – இஸ்ரேல் ராணுவம்


கடந்த மே 10ஆம் தேதி இஸ்ரேலுடனான மோதல் தொடங்கியதிலிருந்து ஞாயிற்றுக்கிழமைதான் “மிகவும் கொடூரமான” நாளாக அமைந்தது என்று காசாவில் உள்ள பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஞாயிறன்று காசாவில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் 16 பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.
காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் இதுவரை தங்கள் தரப்பில் இரண்டு குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது.
காசாவில் இதுவரை 188 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் 55 குழந்தைகள் மற்றும் 33 பெண்களும் அடக்கம் என்று கூறுகிறது ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பாலத்தீன சுகாதார அமைச்சகம்.
பாலத்தீனர்கள் 1,230 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உயிரிழந்தவர்களில் தீவிரவாதிகளும் அடக்கம் என்று கூறுகிறது இஸ்ரேல்.
கடந்த ஒரு வார காலத்தில் காசா பகுதியில் இருந்து பாலத்தீன ஆயுதக் குழுவினர் தங்கள் பகுதியை நோக்கி 3,000-க்கும் அதிகமான ராக்கெட்டுகளை ஏவித் தாக்கியுள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. அவற்றில் பெரும்பாலானவை நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டன.

நள்ளிரவுக்குப் பின் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் ஹமாஸ் தொடர் ராக்கெட் தாக்குதல்களை நடத்திய சற்று நேரத்திலேயே திங்கட்கிழமை அதிகாலை காசா நகரின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்ரேலிய போர் விமானங்கள் 80 வான் தாக்குதல்களை நடத்தின.
இருதரப்பு மோதல் தொடர்ந்தால் அந்தப் பிராந்தியத்தில் கட்டுப்படுத்த முடியாத நெருக்கடி உண்டாகும் என்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் நெருக்கடி காரணமாக காசாவில் எரிபொருள் பற்றாக்குறை உண்டாகும் என்றும் இதனால் மருத்துவமனைகள் மற்றும் பிற சேவைகள் பாதிக்கப்படும் என்றும் ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரித்துள்ளது
புதியது பழையவை