இலங்கை கொழும்புத்துறைமுகத்தில் தற்பொழுது தீக்கிரையாகி வரும் எம்.வீ. எக்பிரஸ் பேர்ல் கப்பல் நங்கூரமிடுவதற்கு கட்டாரும், இந்தியாவும் அனுமதி வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கப்பலில் மொத்தமாக 1486 கொள்கலன்கள் காணப்பட்டதாகவும் இதில் 25 கொள்கலன்களில் அமிலங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சரியான முறையில் கொள்கலன்களில் அடைக்கப்படாமையினால் அமிலக் கசிவு ஏற்பட்டுள்ளதாக கப்பல் நிறுவனத்தின் நிறைவேற்றுத் தவிசாளர் ரிம் ஹார்ட்னோல் ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு பல்லாயிரம் கிலோ மீற்றர்கள் தொலைவிலேயே இந்த அமிலக் கசிவு கண்டறியப்பட்டுள்ளது. கொள்கலன்களை தரையிறக்கிக் கொள்வதற்கு இரண்டு நாடுகளின் துறைமுகங்களில் அனுமதி கோரப்பட்ட போதிலும் அனுமதி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் மேற்கு கரை துறைமுகத்திலும், கட்டாரின் ஹமாட் துறைமுகத்திலும் இந்த அனுமதி கோரப்பட்டிருந்ததாகவும் இரு நாடுகளும் கப்பல் நங்கூரமிடுவதற்கு அனுமதி வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவிலிருந்து கடந்த பெப்ரவரி மாதம் இந்தக் கப்பல் புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இரண்டு துறைமுகங்களில் ஏதேனும் ஒன்றில் கொள்கலன்கள் இறக்கப்பட்டிருந்தால் இந்த விபத்தினை தவிர்த்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கப்பல் விபத்தினால் இலங்கையின் கடற்பரப்பு உள்ளிட்ட சுற்றுச் சூழலுக்கு பாரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சேத விபரங்கள் இதுவரையில் மதிப்பீடு செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.