அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
கொவிட் தொற்றால் ஏற்படுகின்ற பாதிப்புக்களையும் உயிரழிப்புக்களையும் குறைப்பதே தடுப்பூசி வழங்குவதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசியைப் பெற்றதன் பின்னர் குறிப்பிட்ட காலப்பகுதியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்ததன் பின்னர் நபரொருவருக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகும்.
எனினும் தொற்று ஏற்படாது என்று கூற முடியாது. மாறாக தொற்று ஏற்பட்டாலும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறைவாகும். எனவே தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களும் தமக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்று எண்ணி மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
ஏனையவர்களை விட கர்பிணிகளுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும். எனவே அவர்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும். கர்பிணிகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குமாறு இதுவரையில் அறிவித்தல் வழங்கப்படவில்லை. தடுப்பூசிகள் தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட போது , அவற்றில் கர்பிணிகள் உள்ளடக்கப்படவில்லை என்பதே அதற்கான காரணியாகும்.
எனினும் சில நாடுகளில் கர்ப்பம் தரித்துள்ளதை அறியாமல் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ள பெண்களுக்கு இதுவரையில் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சில நாடுகள் கர்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளன.
எனவே இலங்கையிலும் துரிதமாக அதற்கான அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம். இதே போன்று பாலூட்டும் தாய்மாருக்கு தடுப்பூசி வழங்குவதில் எவ்வித சிக்கலும் கிடையாது. தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முன்னரும், பெற்ற பின்னரும் பாலூட்டுவதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்றார்.