கொரோவின் மூன்றாவது அலை நாடு பூராகவும் அதிகரித்து வரும் நிலையில் இன்றைய 11-05-2021 ம் திகதி மாவட்ட அரசாங்க அதிபர் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸ் பரவல் விகிதாசார அடிப்படையில் பார்க்கும் போது சில வேளைகளில் அதிகமாகவும் சில வேளையில் குறைவாகவும் காணப்படுகின்றது. கிழக்கு மாகாண ஆளுநர் எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக மாலை 6 மணியுடன் சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட வேண்டும், அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்கின்ற பார்மசி போன்ற வர்த்தக நிலையங்கள் இரவு 9 மணி வரைக்கும் திறந்து இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஆயிரம் தொற்றாளர்களை பராமரிக்க வசதிகளைக் கொண்ட கட்டில் வசதிகளை ஏற்படுத்த வேண்டியுள்ளதால் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விவசாய பிட மாணவர் தங்கியிருக்கும் விடுதியினை கொரோனா தொற்று நோயாளர்களை பராமரிக்கும் நிலையமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதியால் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருபவர்களை தடுத்து பரிசோதனை செய்வதற்காக 7இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன
அதனூடாக அவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மாவட்டத்துக்குள் அழைத்து வரப்படுவார்கள். பொது நலன் விரும்பிகள் மற்றும் ஏனைய ஸ்தாபனங்களை சேர்ந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பல உபகரணங்களை கையளிப்பதற்கு முன்வந்துள்ளார்கள் அவர்களுடன் நாம் நேரடியாக பணம் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடாமல், அவர்களே பொருட்களை கொள்வனவு செய்து கொடுக்கலாம் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே மட்டக்களப்பு மாவட்ட மக்களிடம் நான் வினயமாக கேட்டுக் கொள்வது என்னவென்றால் நாளுக்கு நாள் கொரோனா மூன்றாவது அலையின் வீரியம் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் வீணாக யாரும் வெளியே வரவேண்டாம் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்