மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கடற்கரையில் மே 18 ஆம் திகதி முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை மேற்கொண்ட 10 பேரையும் எதிர்வரும் 16.06.2021 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவட்ட நீதவான் நீதிமன்றம் வாழைச்சேனை உத்தரவிட்டுள்ளது.
இதன் வழக்கு மீண்டும் இன்றைய தினம் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ் வழக்கில் சந்தேக நபர்கள் சார்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி கே.சுகாஸ்,சட்டத்தரணி ரம்சின் மற்றும் சட்டத்தரணி ஜெயசிங்கம் ஆகியோர்கள் ஆஜராகியிருந்தனர்.
இதேவேளை, இவ் வழக்கு தொடர்பாக சட்டத்தரணி கே.சுகாஸ் பின்வருமாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்...
இவ் வழக்கில் 2 பெண்களும் பொலிசாரல் காரணமின்றி கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுட்டிகாட்டப்பட்டதாகவும் நீதி மன்றம் மிகுந்த கரிசனையோடு பெண்கள் தொடர்பான விசேட அறிக்கையினை அடுத்த தவணையில் தாக்கல் செய்யுமாறு பணித்திருக்கிறது.
அடுத்த தவணையில் பொலிசார் பெண்கள் தொடர்பான சாதகமான அறிக்கையினை சமர்ப்பிப்பார்கள் என நம்புகின்றோம் ஏன தெரிவித்தார்.
18.05.2021 ஆம் திகதி செவ்வாய் கிழமை கிரான் கடற்கரையில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஏற்பாட்டாளரான குருசுமுத்து வி.லவக்குமார் மற்றும் 2 பெண்கள் உட்பட 9 பேரும் கல்குடா பொலிசாரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டு மாவட்ட நீதவான் நீதிமன்றம் வாழைச்சேனை நீதிபதி எம்.எச்.எம்.பசில் முன்னிலையில் பொலிசாரினால் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்