தீப்பரவலுக்கு உள்ளான எக்ஸ்ப்ரெஸ் பேர்ல் கப்பல், நீர்க்கசிவு காரணமாக தற்போது கடலில் மூழ்கி வருவதாக இலங்கை கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலை ஆழ்கடலுக்கு இட்டுச் செல்லுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று பணிப்புரை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், கப்பல் நங்கூரமிட்டுள்ள பகுதிக்கு கடற்படையின் விசேட குழு ஒன்று இன்று 02-06-2021ம் திகதி காலை சென்றிருந்தது.
இதன்போதே, குறித்த கப்பல் தற்போது கடலில் மூழ்கிச் செல்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவிக்கின்றது
இதன்படி, குறித்த கப்பலில் இருந்து பெருமளவான எண்ணெய் கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
அவ்வாறு எண்ணெய் கசிவு ஏற்பட்டால், அதன் விளைவாக திக்வோவிட்ட பகுதி முதல் நீர்கொழும்பு – கெபுன்கொட பகுதி வரையிலான கடற்பகுதியில் எண்ணெய் படிமங்கள் மிதக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த கப்பல் மூழ்கினால், அதன் ஊடாக ஏற்படும் சூழல் பாதிப்புக்களைக் கட்டுப்படுத்த, இந்தியாவிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.