கொடுப்பனவு வழங்குவதற்காக மக்களை ஒன்று கூட்டிய அதிகாரிகள்!


முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 5000 ரூபா கொடுப்பனவுகளை வீடு வீடாக சென்று வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்ட போதும் பல்வேறு இடங்களிலும் மக்களை ஒன்று கூட்டி நிதி வழங்குகின்ற செயற்பாடுகளில் சில அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்

இவ்வாறான நிலையில் நாடுபூராகவும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள நிலையில் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற 5000 ரூபா கொடுப்பனவு மற்றும் உர மானியங்கள் வழங்குவதற்காக மக்கள் அதிகளவில் ஒன்று கூடுகின்ற சந்தர்ப்பங்களை முல்லைத்தீவு மாவட்டத்தில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.


மக்களின் இவ்வாறான அசமந்த போக்கும் அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக கொரோனா வைரஸினுடைய தாக்கம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பிருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இவ்வாறான நிலைமையில் இன்று காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் கிராம அலுவலர் பிரிவில் சமூர்த்தி கொடுப்பனவு வழங்குவதற்காக சுமார் 50 பேர் வரையில் ஒன்று கூடி இருந்த நிலையில் காவல்துறையினர் குறித்த மக்களை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்ததோடு குறித்து அதிகாரிகளின் உயர் அதிகாரியான பிரதேச செயலாளரை சம்பவ இடத்திற்கு அழைத்து பிரதேச செயலாளர் குறித்து அதிகாரிகளுக்கு வீடு வீடாக சென்று பணத்தை வழங்குமாறு அறிவுரை வழங்கியுள்ளார்
புதியது பழையவை