ஊடகசுதந்திரம் மீறப்படும்போது அதற்கு எதிரான நாங்கள் குரல்கொடுக்கின்றோம்,ஊடகவியலாளர்கள் பாதிக்கப்படும்போது நாங்கள் குரல் கொடுக்கின்றோம்.சில ஊடகங்கள் உண்மைக்குக்கு புறம்பானவற்றினை தெரிவிக்கும்போது அதனால் பாதிக்கப்படுகின்றபோது யாரிடம் அவர்கள் செல்வார்கள் என கிராமிய அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை வளர்ப்பு சிறுபொருளாதார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கேள்வியெழுப்பினார்.
ஜனநாயகத்திற்கு எதிராக அரசாங்கம் செயற்படுவதாக குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சிகள்,நாளை கொவிட்டினால் மக்கள் இறக்கும்போது அதனையும் குற்றச்சாட்டாக அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவருவார்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
மக்களின் நியாயமான ஜனநாயக ரீதியான போராட்டங்களை அரசாங்கம் அடக்கவில்லை, நாட்டின் கொவிட் சூழ்நிலையினை கருத்திற் கொண்டு, நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்குமாறே கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊடகங்கள் நடுநிலையான கருத்துகளை தெரிவிக்கவேண்டும்,அதுவே அனைவருக்கும் ஆரோக்கியமானதாகும் எனவும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதியோ,பிரதமரோ,அரசாங்கத்தில் உள்ள பொறுப்புவாய்ந்த அமைச்சர்களோ ஊடகங்களை அடக்க வேண்டும் என்று கூறவில்லை. எதிர்க்கட்சியினர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி எந்த இடத்திலும் குறிப்பிட்ட ஊடகங்களை அடக்கவேண்டும்,ஒடுக்கவேண்டும் என்று கூறியதாக நான் அறியவில்லை,ஊடக சுதந்திரம் பேணப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி மிகவும் கவனமாக இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
