ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி வெளியானது


பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை துறை அமைச்சு என்ற புதிய அமைச்சு அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சு மற்றும் நிதி அமைச்சு ஆகியவற்றுக்குரிய விடயதானங்கள் அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, நிதி அமைச்சின் கீழ் இருந்த தேசிய திட்டமிடல் திணைக்களம், தொகைமதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம், கொள்கை கற்கைகள் நிறுவனம், மதிப்பீட்டுத் திணைக்களம், இலங்கை கணக்குகள் மற்றும் கணக்காய்வு தர மீளாய்வுச் சபை, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு உள்ளிட்ட நிறுவனங்கள் பிரதமரின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதே நேரம் பசில் ராஜபக்ஷ சந்தியப் பிரமாணம் செய்துகொண்ட நிதி அமைச்சின்கீழ், பொதுத் திறைசேரி, அரச நிதிக் கொள்கைகள் திணைக்களம், தேசிய பாதீட்டுத் திணைக்களம், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், அரச நிதி திணைக்களம். அரச நிதி கணக்குகள் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அத்துடன் இலங்கை மத்திய வங்கி, சகல அரச வங்கிகள், நிதி, காப்புறுதி மற்றும் அவற்றின் நிர்வாகத்துக்குட்பட்ட நிறுவனங்கள் மற்றும் அதனோடு இணைந்த நிறுவனங்கள், இலங்கைக் காப்புறுதிச் சபை, இலங்கை பிணையங்கள் மற்றும் செலாவணி ஆணைக்குழு உள்ளிட்ட பல திணைக்களங்கள் பசில் ராஜபக்ஷவின் நிதி அமைச்சிற்கு உரித்ததாக்கப்பட்டுள்ளன.

இதே நேரம் நகர அபிவிருத்தி, கழிவுப்பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் அலுவல்கள் இராஜாங்க அமைச்சு மற்றும் கரையோரப் பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு என்பனவற்றுக்கு உரித்தான விடயதானங்களும் இந்த வரத்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளன
புதியது பழையவை