பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்


இலங்கையில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய எதிர்வரும் மாதம் பாடசாலைகளை மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஷ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில்,
கோவிட் - 19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வித்துறைக்கு பாரியதொரு சவால் ஏற்பட்டுள்ளன.

தொலைநோக்கு கல்வி முறைமை ஊடாக கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அவை முழுமையற்றதாக காணப்படுகிறது.

இணையவழி முறையிலான கல்வி முறைமையை பாடசாலை கல்வி முறைமையுடன் ஒப்பிட முடியாது.
கல்வித் துறைக்கு ஏற்பட்டுள்ள சவால் நிலையினை குறைந்தளவிற்கு குறைத்து கொள்வதற்காகவே இணையவழி முறைமையிலான கற்றல் இடம்பெறுகிறது.

அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி சேவை ஊடாக கல்விசார் நிகழ்ச்சிகள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒளிப்பரப்பாகுகின்றன.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாடசாலைகளை மீள திறக்க எதிர்பார்த்துள்ளோம்.
பிரதேச தொடர்பு குழுவினர் பாடசாலைகளை மீள திறப்பது குறித்து முறையான அறிக்கை கல்வி அமைச்சுக்கு சமர்ப்பிப்பார்கள்.

இதன் முதற்கட்டமாக நாடு தழுவிய ரீதியில் உள்ள 100ற்கும் குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் 2,962 பாடசாலைகளை திறக்க எதிர்பார்த்துள்ளோம்.

திட்டமிட்ட வகையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம், ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை, க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடத்தப்படும். பரீட்சைகளை தொடர்ந்து பிற்போட முடியாது.

பரீட்சாத்திகளின் நலனை கருத்திற் கொண்டு இரண்டு மாத காலத்திற்குள் மேலதிகமான கற்றல் நடவடிக்கைகள் அனைத்து பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். 
புதியது பழையவை