மண் அகழ்விற்கு வழங்கப்படும் அனுமதிப் பத்திரத்தில் காலம் குறிப்பிட்டு வழங்கப்படாமையினால் சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் மண் அகழ்வினை கட்டுப்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், இது தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மண் அகழ்வு செயற்பாடுகள் தொடர்பில் சுற்றாடல் அமைச்சருக்கும், ஆளுநர்களுக்கும், கிழக்கு மாகாண அரசாங்க அதிபர்களுக்கும் புவிச்சரிதவியல் மற்றும் சுற்றாடல் திணைக்களம் ஆகியவற்றினை ஒருங்கிணைத்து நிகழ் நிலையூடாக ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதன்போது சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது. அந்தவேளையில் பொலிஸாரினால் மணல் கொண்டு செல்லும் போது அதனைத் தடுப்பதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளதன் காரணமாகச் சிரமத்தினை எதிர்கொள்வதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
வழங்கப்படுகின்ற அனுமதிப்பத்திரத்தில் காலம் குறிப்பிட்டு வழங்காமையினால் கட்டுப்படுத்துவதில் சில சிரமங்கள் உள்ளதென்பதை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளேன்.
இது தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறான கட்டுப்பாடுகள் வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டால் இலகுவாகச் சட்ட விரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்த முடியும் என நினைக்கின்றேன்.