மட்டக்களப்பு மதுவரித்திணைக்களத்தினால் முற்றுகை

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மதுபான வியாபாரம் மற்றும் உற்பத்தியை தடுக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவான கசிப்பு மற்றும் சட்ட விரோத சாராயங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட காலத்தில் முன்னெடுக்கப்படும் சட்ட விரோத போதைப்பொருள் விற்பனை மற்றம் பாவனையினை கட்டுப்படுத்தும் விசேட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

இதன்கீழ் வவுணதீவு மற்றும் வாழைச்சேனை ஆகிய பகுதிகளில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போது கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றும் சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம் ஒன்றும் சட்ட விரோத கசிப்பு விற்பனை நிலையம் ஒன்றும் முற்றுகையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் எஸ்.ரஞ்சனின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி அவுட்ஸ்கோனின் தலைமையில் இந்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இதன்போது வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு காட்டுப்பகுதியில்  கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டதுடன் அங்கு கசிப்பு உற்பத்திக்காக நான்கு பரல்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 03இலட்சத்து 45ஆயிரம் மில்லி லீற்றர் கோடா மீட்கப்பட்டு அளிக்கப்பட்டதுடன் இது தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

இதேபோன்று வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட நாசிவன் தீவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது கசிப்பு விற்பனை நிலையம் ஒன்றும் சட்டவிரோத மதுபான விற்பனை நிலையமும் முற்றுகையிடப்பட்டதுடன் அங்கிருந்து 1050மில்லிமீற்றர் கசிப்பும்,03கேஸ் சாராய போத்தல்களும் மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி அவுட்ஸ்கோன் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புதியது பழையவை