தமிழரசு வாலிபர் முன்னணித் தலைவரும், கோரளைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினருமான கி.சேயோனிடம், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவு காத்தான்குடி காவல்துறையினரால் கையளிக்கப்பட்டது.
மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டதை முன்னிட்டு 21.11.2021 தொடக்கம் 28.11.2021 வரை மாவீரர் நினைவு தினத்தை அனுஷ்டிக்கக் கூடாது எனக் கோரியே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
மாவீரர் தின நிகழ்வுகளுக்குத் தடை விதித்து வடக்கு கிழக்கு பூராகவும் மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்களைக் குறி வைத்து தடையுத்தரவு வழங்கும் படலம் காவல்துறையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக கடந்த 20ம் திகதி எனக்கும் காத்தான்குடி காவல்துறையினரால் தடையுத்தரவு வழங்கப்பட்டது. இதில் விசேட அம்சம் என்னவெனில் இரவு வேளையில் வீட்டுக் கதவினைத் தட்டியும் இத்தடையுத்தரவுகள் கையளிக்கப்படுகின்றன என்பது தான்.

