சர்வதேச அமைப்புகளினால் மனித உரிமை ரீதியான குற்றச்சாட்டுகளை கொண்டுள்ள ஒருவர் இலங்கை ஆசிரியர் சங்கத்தினை குற்றஞ்சாட்டுவதற்கு அருகதையற்றவர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொதுச்செயலாளரும் கிழக்கு மாகாண இணைப்பாளருமான பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்தார்.
நேற்று மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக ஒருசிலர் முன்னெடுத்த போராட்டத்தின்போது ஆசிரியர் மீது தாக்குதல் நடாத்தியவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி நாளை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் பாடசாலைக்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
அண்மையில் சிவானந்தா தேசிய பாடசாலை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார்.அது தொடர்பில் சில விடயங்களை தெளிவுபடுத்தவேண்டிய அவசியமுள்ளது.
சிவானந்தா தேசிய பாடசாலை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஆசிரியர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல் குறித்து அந்த அறிக்கையில் எந்தவித கண்டனமும் தெரிவிக்காமல் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்தியகுழு உறுப்பினராகவுள்ள என்னைப்பற்றியே அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனின் அறிக்கை தொடர்பில் வன்மையான கண்டனத்தினை தெரிவிப்பதுடன் குறித்த ஆர்ப்பாட்டத்தின் பின்புலத்தில் அவர் உள்ளார் என்பது அவரது அறிக்கையூடாக மிக தெளிவாக தெரிகின்றது.
என்மீது 41குற்றச்சாட்டுகள் உள்ளதாக அவரும் அவரது அடிவருடிகளும் தெரிவித்துவருகின்றனர்.அவ்வாறு என்மீது 41குற்றச்சாட்டுகள் இருக்குமானால் இலங்கையினுடைய அரசியலமைப்பின் அடிப்படையில் தாபனவிதிக்கோவையொன்று காணப்படுகின்றது.இலங்கை அரச ஊழியர்களின் ஒழுக்கம் தொடர்பில் அந்த தாபனவிதிக்கோவை காணப்படுகின்றது.
நான் தனிப்பட்ட ஆசிரியருக்கும் அப்பால் இலங்கை அரசியலமைப்புக்குட்பட்ட,தாபன விதிக்கோவைக்குட்பட்ட ஆசிரியர்களைக்கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினராகவும் மட்டக்களப்பு மாவட்ட பொதுச்செயலாளரானவும் இருந்துவருகின்றேன்.
எமது சட்ட ரீதியான அமைப்பாகவும் அதற்கான சட்ட விதிகளும் காணப்படுகின்றது.அதன்ஊடாகவே நான் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றேன்.பாராளுமன்ற மூலம் இயற்றப்பட்ட தொழிற்சங்கம் தொடர்பான சட்ட விதிகளுக்குட்பட்டவனாகவே நான் செயற்பட்டுவருகின்றேன் என்பதை பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் புரிந்துகொள்ளவேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனுக்கு எவ்வாறு பாராளுமன்ற சிறப்புரிமைகள் காணப்படுகின்றதோ,அதனைவிட சிறப்புரிமை எனக்கு காணப்படுகின்றது.சர்வதேச மனிதவுரிமைகள்,மனிதாபிமான சட்ட அடிப்படையிலும் சர்வதேச ரீதியிலும் எமது தொழிற்சங்கம் தொழிற்படுகின்றது.இவ்வாறான அமைப்புக்கு எதிரான அறிக்கையினை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராகவுள்ள அவருக்கு மாவட்ட கல்வி அபிவிருத்தி தொடர்பாக கதைப்பதற்கு தகுதியில்லையென்பதையும் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன்.
எமது சங்கத்திற்கு எதிராக இவ்வாறு தொடர்ந்து செயற்படுவாரானால் அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் பதவியிலிருந்தும் அவரை வெளியேற்றுவதற்கு நாங்கள் தயங்கமாட்டோம்.
இலங்கையில் ஆசிரியர் சங்கத்திற்கு எதிராக நடைபெற்ற பல அரசியல்வாதிகள் தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள்.இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அவர் எதிர்காலத்தில் சிந்தித்து செயலாற்றவேண்டும்.
64வருடம் பழமையான சங்கம் எமது சங்கம். பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனை விட இரண்டு இலட்சம் பேர் எங்களது சங்கத்தில் உள்ளனர்.ஆசிரியர்கள்,அதிபர்களும் கல்வியலாளர்களும் இணைந்தே இந்த சங்கத்தினை வழிநடாத்துகின்றார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் போன்று குண்டர்களை வைத்துக்கொண்டு நாங்கள் அரசியல் நடாத்தவில்லை.ஒரு சிறந்த தலைமைத்தும் அவருக்கு இருக்குமானால் அவரை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைக்கின்றேன்.அவரை நான் பல தடவைகள் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைத்திருக்கின்றேன்.
அதனை முகங்கொடுக்கமுடியாத நிலையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன்,தனது அரசியல் அதிகாரத்தினைக்கொண்டு ஆசிரியர்களையும் அதிபர்களையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் வரும் கனவை சந்திரகாந்தன் மறக்கவேண்டும்.
ஆசிரியர்கள் மீதும் பாடசாலை விழுமியங்கள் மீதும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் நடைபெற்ற அடாவடித்தனமான செயற்பாட்டினை எதிர்த்து நாளை இலங்கையில் அனுராதபுரத்திலும்,பொலநறுவை உட்பட பல பகுதிகளிலுமிருந்தும் ஆசிரியர்கள் சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக ஒன்றுகூடுகின்றார்கள் என்பதுடன் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் எம்முடன் உடன்படவேண்டும்.