ஒரு புதிய அரசியல் ஆண்டில் என்ன காத்திருக்கிறது? அல்லது என்ன செய்ய வேண்டும்?என்று முடிவெடுப்பதெல்லாம் கடந்த ஆண்டின் தொடர்ச்சியாகத்தான் அமைய முடியும்.எனவே கடந்த ஆண்டைப்பற்றிய தொகுக்கப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில்தான் புதிய ஆண்டைத் திட்டமிடலாம்.
கடந்த ஆண்டில் தமிழ் அரசியலில் ஒப்பீட்டளவில் மூன்று முக்கிய நகர்வுகள் இடம்பெற்றன.முதலாவது- கடந்த மார்ச்மாத ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு மூன்று கட்சிகள் ஒருங்கிணைந்து ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைத்தன.இரண்டாவது-கடந்த செப்டம்பர்மாத ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டு கோரிக்கையை முன்வைத்தன. மூன்றாவதாக, அண்மை மாதங்களாக இந்தியாவை நோக்கி ஒரு கூட்டு கோரிக்கையை முன்வைக்கும் நோக்கத்தோடு ஒருங்கிணைப்பு முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டில் தமிழ் அரசியலில் வேறு பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் இம்மூன்று நகர்வுகளையும் குறிப்பாக கவனிப்பதற்கு ஒரு காரணம் உண்டு. ஏனெனில் இம்மூன்று நடவடிக்கைகளும் முதலாவதாக கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள்.இரண்டாவதாக வெளிவிவகார முன்னெடுப்புக்கள்.சுமந்திரன் தலைமையிலான குழு அமெரிக்காவுக்கு சென்றதையும் சேர்த்துக் கொள்ளலாம்.ஆனால் அது தனியோட்டம்,ஒருங்கிணைந்த முயற்சி அல்ல.
இனப்பிரச்சினை எனப்படுவது சாரம்சத்தில் ஓர் அனைத்துலக பிரச்சினையே என்று அரசியல் அறிஞர்கள் கூறுவார்கள்.அதற்கு அனைத்துலக தீர்வுதான் உண்டு.அதன்படி பார்த்தால் அனைத்துலகத்தை கையாள்வதற்கு ஏதோ ஒரு பொறிமுறை வேண்டும். ஏதோ ஒரு வழி வரைபடம் வேண்டும்.
அதாவது தமிழ் மக்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கொள்கையும் வெளிவிவகார கட்டமைப்பும் வேண்டும்.எனவே கடந்த ஆண்டில் ஜெனிவாவை நோக்கியும் இந்தியாவை நோக்கியும் கோரிக்கைகளை முன்வைக்கும் நடவடிக்கைகளை தொகுத்துப் பார்த்தால் அவை வெளிவிவகார நடவடிக்கைகள்தான். இந்த அடிப்படையில் இம்மூன்று வெளிவிவகார நடவடிக்கைகளையும் சற்று ஆழமாகப் பார்க்கலாம்
முதலாவது முயற்சி மன்னாரைச் சேர்ந்த தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தலைவர் சிவகரனால் முன்னெடுக்கப்பட்டது. இதில் ஏனைய சிவில் சமூக பிரதிநிதிகள் இணைந்து மூன்று கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஜனவரி மாதம் 21ஆம் திகதி ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.இது கடந்த 12 ஆண்டுகளில் ஏற்பட்ட ஒரு முக்கியமான அடைவு. இக்கடிதம் மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே தமிழ் மக்களின் பிரச்சினையை கொண்டு போக வேண்டும் என்ற மிகத் தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருந்தது. அம்முதலாவது கடிதத்தின் தொடர்ச்சியாக மேலும் இரு கடிதங்களை அனுப்புவதற்கு முடிவு எடுக்கப்பட்டது.ஆனால் ஐநா தீர்மானத்தின் பூச்சியவரைபு வெளியிடப்பட்டதும் கூட்டமைப்பு மேற்கு நாடுகளுடன் இணைந்து தீர்மானத்தை இறுதியாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.இதனால் ஒருங்கிணைப்பு முயற்சிகள் குலைந்தன.குறைந்தபட்சம் எனைய இரண்டு கட்சிகளையாவது ஒருங்கிணைக்கக்கூட முடியவில்லை.ஏனென்றால் 13வது திருத்தம் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியையும் ஒரே நிலைப்பாட்டிற்குக் கொண்டுவர முடியவில்லை.இது முதலாவது முயற்சி.
இரண்டாவது முயற்சி,கடந்த செப்டம்பர் மாதம் ஜெனிவா கூட்டத்தொடரை யொட்டி ஐந்து கட்சிகள் அனுப்பிய கடிதம். இவ்வொருங்கிணைப்பு முயற்சியை டெலோ இயக்கம் முன்னெடுத்தது.தமிழரசுக் கட்சி அதை ஆதரிக்கவில்லை. அதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணையவில்லை.
மூன்றாவது முயற்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.இந்தியாவை நோக்கி ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைப்பது.இதுவும் டெலோ இயக்கத்தால் முன்னெடுக்கப்படுகிறது.இது முன்னைய ஒருங்கிணைப்பு முயற்சியின் அடுத்த கட்டம்.இந்த முயற்சியிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணையவில்லை.தமிழரசுக்கட்சி தொடக்கத்தில் ஒத்துழைக்கவில்லை. எனினும் பின்னர் ஒத்துழைத்தது.இடையில் சுமந்திரன் தலைமையிலான ஓரணி அமெரிக்காவுக்கும் சென்றது.இந்த ஒருங்கிணைப்பு முயற்சிகள் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் முழு வெற்றி பெறவில்லை.