முல்லைத்தீவில் ஊடகவியலாளரை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் காவல்துறையினர்

முல்லைத்தீவு- மாங்குளம் நீதிமன்றத்திற்கு முன்பாக செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளருக்கு மாங்குளம் நீதிமன்றத்தின் காவல் கடமையில் இருந்த காவல்துறையினரால் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதோடு அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் இன்று காலை முல்லைத்தீவு மாங்குளம் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக நீதிமன்ற பெயர்ப் பலகை மற்றும் நீதிமன்றத்திற்கு வெளியில் செய்திக்காக புகைப்படம் மற்றும் காணொளி பதிவு செய்துகொண்டு அந்த இடத்தில் இருந்து வெளியேறினார்.

இதன்போது அங்கு கடமையில் இருந்த மாங்குளம் காவல்துறையினர் ஊடகவியலாளரை மறித்துள்ளனர்.
அப்போது ஏன் காணொளி எடுத்ததாகவும் யார் எனவும் கோரியபோது ஊடகவியலாளர் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டையை காண்பித்து ஊடகவியலாளர் என உறுதிப்படுத்திய போதும் ஊடகவியலாளர்களுக்கு நீதிமன்றத்திற்கு வெளியில் காணொளி, புகைப்படம் எடுக்க முடியாது என காவல்துறையினர் ஈடுபட்டனர்.

இதன்போது நீதிமன்றத்திற்கு வெளியில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு எந்த தடையுமில்லை என்று ஊடகவியலாளர்கள் காவல்துறையினருக்கு எடுத்துக் கூறியபோது அதனை காவல்துறையினர் ஏற்றுக்கொள்வில்லை.

குறித்த ஊடகவியலாளர் உடைய அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு நீதிமன்றத்திற்குள் சென்று அவருடைய உயர் அதிகாரிகளை கேட்க வேண்டும் என்று சுமார் பத்து நிமிடங்களுக்கு மேல் ஊடகவியலாளரின் அடையாள அட்டையை வழங்காது ஊடக கடமைக்கு இடையூறு விளைவித்தனர்.

இவ்வாறு பத்து நிமிடங்களின் பின்னர் மீண்டும் ஊடகவியலாளரின் அடையாள அட்டையை கொண்டு வந்து வழங்கிய காவல்துறையினர் குறித்த ஊடகவியலாளரை தங்களுடைய கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.
புதியது பழையவை