ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளை ஒழுங்கு செய்தல் மற்றும் நடத்துதல் ஆகிய செயற்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஜனவரி 22 ஆம் திகதியும், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரையும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று நள்ளிரவு முதல் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை நிறைவடையும் வரையில் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பெப்ரவரி முதலாம் திகதி நள்ளிரவு முதல் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரையிலும், பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதிக்குள் பரீட்சையுடன் தொடர்புடைய பாடங்களுக்கான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துதல் மற்றும் பரீட்சைக்கான உத்தேச வினாக்கள் அடங்கிய வினாப்பத்திரங்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், பரீட்சை வினாப் பத்திரங்களில் உள்ள வினாக்களை வழங்குவதாக அல்லது அதற்கு சமமான வினாக்களை வழங்குவதாக துண்டுப் பிரசுரங்கள், இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்களின் ஊடாக பகிரங்கப்படுத்தல் மற்றும் அவற்றை தம்முடன் வைத்திருத்தல் ஆகியன குற்றமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறும் பட்சத்தில் அவை தொடர்பில் அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது உரிய தரப்பினருக்கோ அறிவிக்குமாறும் பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
புதியது பழையவை