வரலாற்றில் மறைக்கப்படும் சத்தியங்கள்

"வரலாற்றில் சத்தியத்தைப் பதிவு செய்ய முற்படும் நாம் சாவு மன்னிப்புச் சலுகையை நீட்டி முழக்கி அந்தச் சலுகையின் நிழலில் சத்தியங்களை மறைத்தால் அது வரலாற்றுக்குச் செய்யப்படும் துரோகம்"

இவ்வாறு ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

" தமிழ் மிரர் " பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையொன்றில் இந்த மேற்கோள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த வகையில் மட்டக்களப்பின் வரலாற்றில் நடந்த இரு முக்கிய சம்பவங்களை, மறைக்கப்பட்ட சத்தியங்களை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

முதலாவது இருதயபுரத்தைச் சேர்ந்த சின்னையா அருள்நேசநாதன் என்பவரது கொலை, மற்றையது திருப் பழுகாமத்தைச் சேர்ந்த நவரத்தினம் என்பவரது சாவு.இந்த இரண்டும் மட்டு .மக்களின் இதயங்களை உலுக்கிய சம்பவங்களாகும் .

சின்னையா அருள்நேசநாதன் இளமையில் மட்டக்களப்பின் பிரபலமான உதைபந்தாட்ட வீரராக விளங்கியவர். 1962ம் ஆண்டு டைனமொஸ் விளையாட்டுக் கழகத்தின் உதைபந்தாட்ட அணியின் தலைவராகத் திகழ்ந்தவர். கனகாம்புஜம்   என்ற பெண்மணியுடன் இல்லற வாழ்வில் இணைந்து கொண்டவர். இவர் படுகொலை செய்யப்பட்ட 1985 ஆண்டு ஜனவரி  7 ம் நாளில் நிர்மலா (வயது 20),நிமாலினி  (வயது 18), நிரஞ்சலா(வயது 15), ஜெயச்சந்திரன் (வயது 13), நிலோஜினி (வயது 11) நிதர்சினி   (வயது 09) பிரேமச்சந்திரன் (வயது 05)ஆகிய இவரது எழு பிள்ளைகளும் கதறிய கதறல் பல கேள்விகளை எழுப்பியது . இவர் என்ன தேசத்துரோகியா ? சமூக விரோதியா ? இல்லையே ! அவ்வாறாயின் விடுதலைப் போராட்டம் எங்கே செல்கிறது ?

இந்த எழு பிள்ளைகளினதும் இவரது மனைவியினதும் எதிர் காலம் எப்படிப்போகும் ? இவரைப் படுகொலை செய்தவர்கள் தமது செயலுக்கு என்ன நியாயம் கற்பிக்கப் போகின்றனர் ?

திரு. அருள்நேசநாதன் மட்டக்களப்பு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பாதுகாப்பு ஊழியர்.ஒருநாள் இந்தக் கூட்டுறவுப் பணிமனைக்குள் புகுந்த ஆயுததாரிகள் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முனைந்தனர் . பாதுகாப்பு ஊழியர் என்ற வகையில் நீட்டப்பட்ட துப்பாக்கியை இலக்கு வைத்து இவர் பூட்டு ஒன்றினால் எறிந்தார் .இலக்குத்  தவறித் துப்பாக்கி தாரிஒருவரின் மண்டை உடைந்தது. மனோ பலமில்லாமல் தனியே துப்பாக்கிப் பலத்தை மட்டுமே நம்பி உள்ளே நுழைந்தவர்கள் இதனால் வெலவெலத்தனர். அங்கிருந்து தப்பி ஓடினர்.

அந்தக் காலம் வரை தமிழரில் 36 இயக்கங்கள் தோன்றியிருந்தன. இதைவிட தனியே கொள்ளைக் கென்றே இயங்கிய கும்பல்களும் இருந்தன . இலங்கையின் சனத்தொகையில் 72 வீதமான சிங்களவரில் ஜே .வி , பி .என்ற ஒரேயொரு ஆயுதக்குழு மட்டுமே தோன்றியிருந்தது . ஆனால் தமிழன்

என்றொரு இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணமுண்டு எனக் கூறும் வகையிலேயே தமிழினம் பிளவுபட்டிருந்தது.

நவக்கிரகங்கள் கூட ஒன்பது பக்கமாக நிற்கின்றன .தமிழ் ஆயுதக்குழுக்களோ சந்திக்கொன்று, ஊருக்கொன்று என்று சொல்லும் வகையில் இருந்தன. ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த முடியாது. யார் அந்த நாளில் என்ன செய்வார்கள் என்றும் தெரியாது .இதனால் கூட்டுறவுத் துறையும் பாதிப்புற்றது. அதனைக் காப்பாற்றா விடில் அத்துறையும் முற்றிலும் சீர் குலைந்து போய்விடும். இதனால் கூட்டுறவாளர்கள் பிரதான இயக்கங்களுடன் தொடர்பு கொண்டனர் .

கூட்டுறவுத் துறைக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் கொள்ளையோ கட்டாய வசூலையோ மேற்கொள்ளக் கூடாது என வேண்டினர். சில இயக்கங்கள் மனப்பூர்வமாக ஒத்துக்கொண்டன .சில கொள்கையளவில் ஏற்றுக்கொண்டன.

 கொள்கையளவில் ஏற்றுக்கொள்வது என்பது ஏற்றுக்கொள்ள வில்லை அல்லது மறுப்பது என்பதே அரசியலில் உண்மையான அர்த்தமாகும்.கூட்டுறவாளர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதற்காக ஒத்துக்கொண்ட இயக்கங்களுள்  புளொட்டும் ஒன்று .

எது எவ்வாறிருந்தாலும் அருள்நேசநாதன் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்ற ரீதியில் தனது கடமையைத்தான் செய்தார். கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம் .

திருக்கோயில் மக்கள் வங்கியை டக்ளஸ் தேவானந்தா கொள்ளையடித்த போது அப்பகுதி மக்கள் அவரைத் துரத்திப் பிடித்து நையப் புடைத்த பின்னர் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.ஆனால் அருள்நேசநாதன் அவ்வாறு எதுவும் செய்யவில்லை . மட்டக்களப்புப்  பொலிஸ் நிலையத்திற்கு மிக அண்மையில் தான் கூட்டுறவுச் சங்கம் இருந்தது .

எல்லாம் முடிந்த பின்னர் தான் கொள்ளையடிக்க வந்தது புளொட் இயக்கம் தான் என்ற விடயம் கசிந்தது .அந்தக் காலகட்டங்களில் சிறுவர்கள் விளையாட்டாகப் பாடுவர்.

"காத்தடிக்குது; புயலடிக்குது

காரைநகரில ஈ .பி . யடிக்குது

போறவழியில புலியடிக்குது

வாறவழியில டெலோ அடிக்குது

கொழும்பு நகரில ஈரோஸ் அடிக்குது

சோத்துப் பார்சலை புளொட் அடிக்குது! "

இவ்வாறாக சோற்றுப் பார்சல் மூலமே இனங்காணப்பட்ட புளொட் கூட்டுறவுச் சங்கத்தினுள் புகும் என சிறுவர்கள் கூட எதிர் பார்த்திருக்க வில்லை. எனினும் தமது முயற்சி முறியடிக்கப்பட்டமை குறித்து புளொட் சீற்றமடைந்தது.

 சந்திவெளி மாமா என்றும்  புளொட் மாமா  எனவும் அழைக்கப்படும்  மகேந்திரன்,  சிறைச்சாலை உத்தியோகத்தராகப் பணியாற்றியவரும் மட்டு.

சிறையுடைப்பின் பின்னர் ஆயுததாரியாக மாறியவருமான பிரசாத் எனப்படும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரே மட்டக்களப்பில் புளொட்டின்  கட்டளையிடும் அதிகாரிகள்.

தமது முயற்சியை ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர் முறியடித்தமை தமக்குக்  கௌரவப் பிரச்சினை எனவும் அவரது வாழ் நாளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று இவர்கள் இருவரும் தீர்மானித்தனர். இவர்களின் கட்டளைக்கு அமைய கல்லாற்றைச் சேர்ந்த வேவி மற்றும் எட்வேட் ஆகியோர் அருள்நேசநாதன் வீட்டுக்குச்  சென்றனர் .

"ஒரு விடயம் சம்பந்தமாக உங்களை விசாரிக்க வேண்டும் "என்று அவரை அழைத்தனர். ஏதோவிபரீதம் நடக்கப்போவதாக உணர்ந்த அருள்நேசநாதனின் மனைவியும், பிள்ளைகளும் இந்த யம தூதுவர்களின் காலில் விழுந்து அவரை விட்டுவிடுமாறு கெஞ்சி அழுதனர்.தமிழ் இனத்தின் அழுகை - அவலம்தான் அந்நாளில் இளைஞர்களைப் போராளிகளாக்கியது. எனினும் இவர்களது அழுகை - கண்ணீர் இந்தத் தூதுவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அவர்கள் அம்பு தானே ?

அருகில் உள்ள சந்தியில் அருள்நேசநாதனின் தலையில் சுட்டு தமக்கிடப்பட்ட கட்டளையை நிறைவேற்றினர். வீரத்துடன்  50 இராணுவத்தினருடன் மோதிச்   சாய்த்தது போன்ற பெருமித உணர்வுடன் சட்டைக் கொலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு சென்றனர்.

புளொட்டின் கௌரவத்தைக் காப்பாற்றி விட்டார்களாம். கௌரவம் என்பது மற்றவர்களால் கொடுக்கப்படுவது. எவருடைய கண்ணீர் மூலமும் அடைய முடியாதது. பூதக் கண்ணாடி மூலமோ தொலை நோக்கி மூலமோ காண முடியாதது.

நவம் என்ற அழைக்கப்படும் நவரத்தினம்  வாகரையின் பிரதேசப் பொறுப்பாளராக  புளொட்டினால் நியமிக்கப்பட்டவர். அப்பகுதியிலிருந்து புளொட் இயக்கத்திற்கு இளைஞர்களைச் சேர்த்தவர். இவ்வாறு இணைக்கப்பட்டோர் ஆயுதப் பயிற்சிக்காகத்  தமிழகத்துக்கு அனுப்பப்பட்டனர். சில காலத்தின் பின் அங்குள்ள பயிற்சி முகாமில் உமா மகேஸ்வரனுக்கு விசுவாசமில்லாதவர்கள் எனக் கருதப்பட்டோர்  தனிமைப் படுத்தப்பட்டனர். பின்னர் இவர்கள் எவரையுமே யாரும் காணவில்லை எனச் செய்திகள் வெளியாகின.

இவ்வாறானோரில் நவம் மூலமாக இணைக்கப்பட்டவர்களும் இருந்தனர்.எனவே இந்த இளைஞர்களின் பெற்றோர் தமது பிள்ளைகள் எங்கே என நவத்திடம் கேள்வி எழுப்பினர். 

அவரால் உறுதியான பதிலை வழங்க முடியவில்லை. எனவே தமது மட்டக்களப்புத் தலைமையிடம் கேள்வி எழுப்பினார்.

சந்தேகம் - கேள்வி கேட்பவர்கள் இயக்கத்திற்கு - உமாமகேஸ்வரனுக்கு விசுவாசமில்லாதவர்களாகக் கருதப்பட்டனர். அந்தப்பட்டியலில் நவமும் இணைக்கப்பட்டார்.இதனால் தனது உயிர் பற்றிய அச்சம் அவருக்கு ஏற்பட்டது

களத்தில் போராடிமடியலாம். அதற்காகத்தானே வீட்டை விட்டு வெளியை வந்தோம். உமா மகேஸ்வரனின் விசுவாசிகள் என்று நிருபிப்பதற்காக, தவறுகளை நியாயப்படுத்த வரவில்லை என்று முடிவெடுத்தார் நவம். எனினும் தன்னால் இணைக்கப்பட்ட இளைஞர்களின் உண்மையான நிலை என்ன என்பதை அறிய வேண்டும் என்பதும் அவரது தவிப்பாக இருந்தது. இதனால் அவர் புலிகளை நாடினார். நிலைமையை விளக்கினார். தனக்குப் பாதுகாப்புத் தர வேண்டும் எனக்கோரினார்.

"எமக்குப் பாதுகாப்பு என நாம் கருதுவது சயனட் மட்டுமே. அதுவே எமது ஆத்மபலம்“ எனப் புலிகள் கூறினர். "அந்தச் சயனட்டில் ஒரு குப்பியை எனக்கும் தாருங்கள்“ எனக் கேட்டார் நவம். "சரி தருகிறோம்.“ ஆனால் எதுவுமே செய்யமுடியாது என்ற கட்டத்தில்தான் நாம் சயனட் குப்பியைப் பயன்படுத்துவதுண்டு. எனவே அவசரப்பட்டுப் பயன்படுத்த வேண்டாம்“  எனக்கூறி ஒரு குப்பியை வழங்கினர். அத்துடன் தமது  தங்குமிடமொன்றில் அவரைத் தங்கவும்  வைத்தனர்.புளொட்டினருடன் இவரது விடயமாகப் பேசித் தீர்வுகா ண முயற்சிப்பதாகவும் கூறினர் .

எவ்வளவோ முரண்பாடுகள் இருந்தாலும்  நூலிழையில்ஒரு புரிந்துணர்வு புளொட்டினருக்கு இருக்குமெனப்  புலிகள் நம்பினர். அக்காலகட்டத்தில் புளொட்டுக்கு ஈ .பி ஆர் எல் எவ் , ஈரோஸ், பாதுகாப்பு பேரவை போன்ற இயக்கங்களுடன் முரண்பாடுகள் வருவதுண்டு. ஈரோசைப் பொறுத்த வரை பெரும்பாலும் தவறான முடிவுகள் எடுப்பதில்லை.

 பாதுகாப்பு பேரவை துட்டனைக் கண்டால் தூர விலகு என்ற கொள்கையைக் கொண்டவர்கள். எனினும் பிரச்சனை என்று வந்தால் முடிவெடுக்கத் தயங்க மாட்டார்கள். அவருக்கு அடித்தனர் இவரைப் பிடித்தனர் என புளொட்டும் ஈ பி ஆர் எல் எவ் வும்அடிக்கடி பிரச்சினைப்படுவதுண்டு. ஒரு சமயம் புளொட்டினால் பிடிக்கப்பட்ட தமது தோழர் ஒருவரின் மீசையைப்  புளொட் தோழி ஒருத்தி பிடித்து இழுத்து அவமானப் படுத்தியதாக ஈ பி ஆர் எல் எவ் குற்றம் சாட்டியது.

எதோ ஒரு தரப்பின் அழைப்பின் பேரில் முடிந்த வரை புலிகள் சமரச முயற்சிகளில் ஈடுபடுவதுண்டு. புலிகள் இதில் ஈடுபடாவிட்டாலும்  பிடித்தவர்களை விடுவித்துத்தானேயாக வேண்டும். ஆனாலும் உங்களுக்காகத்தான் விடுவிக்கிறோம் என்று புலிகளிடம் சொல்லி விட்டு மறுதரப்பினரை பிடித்தவர்கள் விடுவிப்பதுண்டு

இந்த அனுபவத்தின் அடிப்படையில் நவத்தின் பிரச்சினை தொடர்பாக பழுகாமம் பகுதியில் புளொட்டின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்தவருடன் புலிகள் பேச்சு நடத்தினர். 

பேச்சின் இடையே "கொஞ்ச வாகரைப் பெடிகளை ரெயினிங் காம்பில இருந்து இன்குவாறிக்குக் கொண்டு போனதாக நவம் சொன்னாரே ? " என்று கேட்டதற்கு" கொஞ்சமென்ன ஒரு பட்ஜ் அப்பிடியே " என்று சடக்கெனப் பதிலளித்தார்.

அந்தப்பொறுப்பாளர். இந்தப் பதிலைக் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. அதிர்ச்சியூட்டக்கூடிய செய்தியல்லவா அது? சொன்னவரும் தான் அவசரப்பட்டுச் சொல்லிவிட்டதாக உணர்ந்தார்.என்னதான் நட்புணர்வுடன் பழகினாலும் தம்முடன் கதைப்பது வேறொரு இயக்கத்தவரல்லவா என்ற உண்மை அவருக்கு அப்போதுதான் உறைத்தது.

"சரி! நவம் புளொட்டில இருந்து விலகி சிவிலியனா ஊருக்க  இருக்கலாம் தானே“ எனக் கேட்டதற்கு சாதகமாகப் பதில் சொல்லப்பட்டது. அந்தக் காலத்தில் பழுகாமத்தில் உள்ளுர்ப் பிரச்சினைகளைத் தீர்க்கப் பஞ்சாயத்து முறை இருந்தது.

இதற்கும் புலிகளுக்கும் சம்பந்தமில்லை. எனினும் அவர்கள் பஞ்சாயத்தின் நடவடிக்கைகளுக்கு மதிப்பளித்தனர். எனவே  "சரி பழுகாமம் பஞ்சாயத்தின்ர கையில நவத்தை ஒப்படைக்கிறம்.  அவருடைய உயிருக்குப் பிரச்சினை வரக்கூடாது. சம்மதம் எண்டா சொல்லுங்கோ“ என்று கேட்டதற்கு பொறுப்பாளர்  "சம்மதம்“ என்றார்.

பஞ்சாயத்துத் தலைவரிடமும் போய் பிரச்சினை பற்றிக் கூறப்பட்டபோது அவரும் நவத்தைப் பொறுப்பெடுப்பதாகக் கூறினார். எப்போது அவரைக் கொண்டு வருவது என்பதிலும் உடன் பாடு காணப்பட்டது. குறிப்பிட்ட நாளில் பஞ்சாயத்துக் கூடியது. புலிகளின் உறுப்பினர் சுந்தரம் ( தற்போது 2ம் லெப்: சுந்தரம் என்ற மாவீரர் ) நவத்தைப் பஞ்சாயத்தாரிடம் ஒப்படைத்தார்.

சில நிமிடங்களில் ஒரு வாகனத்தில் ஆயுத தாரிகளாக புளொட் உறுப்பினர்கள் வந்து குதித்தனர். "இயக்கப் பிரச்சினையெல்லாம் பஞ்சாயத்தில தீர்க்க முடியாது. இயக்கத்தினால் தான் தீர்க்க வேணும்“ என்று அதிரடியாகக்  கூறினர். நவத்தைக் கொண்டு செல்வதிலேயே குறியாக இருந்தனர். பஞ்சாயத்தினர் தடுத்தனர்.அவர்களை மதிக்கும் நிலையில் புளொட்டினர் இல்லை. அச்சமயம் திடீரென நவம் சயனைட்   குப்பியை மக்களுக்குக் காட்டிவிட்டு அதைக் கடித்தார். 

அதே வேகத்தில் விழுங்கினார். அங்கு கூடியிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி! தொடர்ந்து புளொட் செய்த அத்தனை அடாவடிகளையும் தனது மரணத் தருவாயில் கடகடவெனக் கூறிமுடித்தார் அவர். "சாவின்ர பயம் அவற்ற  முகத்தில கொஞ்சம் கூடத் தெரியல்ல. புளொட்டை அம்பலப்படுத்த  வேணும் எண்ட     மன உறுதி எனக்கு வியப்பா  இருந்துது.  கீழ விழேக்கை தான்   புளொட் ஒழிக எண்டு சொன்னார்“ என்று அக்காட்சியை விபரித்த சுந்தரம் கூறினார். நவத்தின் உறவினரோ கதறினர். புளொட்டினரோ தாம் செய்ய வந்த வேலை இலகுவாக முடிந்து போயிற்று என்ற குரூர திருப்தியுடன் அங்கிருந்து அகன்றனர் .

நவத்திற்கு சைனைட் குப்பி கொடுத்தவரும் அடுத்த நாள் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றார். பாதுகாப்புக் கேட்ட ஒருவருக்கு சயனட்டையும் கண்ணீரையுமே கொடுக்க முடிந்தது என்ற குற்ற உணர்வு அவருக்கு, பேசாமல் யாழ்ப்பாணத்திற்கு நவத்தை அனுப்பியிருக்கலாம்தான், வழியில் பாதுகாப்புக் கெடுபிடிகள் இருந்தன .அதுவும் ஒரு பிரதேசப் பொறுப்பாளராக இனங்காணப்பட்ட ஒருவரை அனுப்பி வைப்பது சுலபமான விடயமல்ல. எதாவது விபரீதமாக நடந்தால் புலிகள் மீதே குற்றஞ்சாட்டப்படும் என்று அவர் பயந்தார் .

இதே வேளை யாழ் சுழிபுரத்தில் சுவரொட்டிகளை ஓட்டச் சென்ற ஆறு மாணவர்களைப் புளொட்டினர் கைது செய்தனர். விசாரணையின் போது "எங்களுக்கும் ஆண்மை இருக்கிறது“ என்று அந்த மாணவர்கள் கூறினர்.இதனால் இந்த ஆறு மாணவர்களும் கொல்லப்பட்டு அவர்களது ஆணுறுப் புக்களும் அறுக்கப்பட்டு புதைக்கப்பட்டனர். புளொட்டின் படுகொலைச் சம்பவங்கள் அரியாலை, பரந்தன் போன்ற பகுதியிலும் பரவலாக இடம்பெற்றன

புளொட் மாமா ,பிரசாத் ஆகிய இருவரும்  புளொட்டிலிருந்து பிரிந்து பரந்தன் ராஜன் (ஞானசேகரன் ) தலைமையிலான ஈ. என் .டி. எல் .எவ் வுடன் இணைந்து கொண்டனர். 

இந்திய ராணுவ காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய ராணுவத்தின் மட்டக்களப்பு  ஈ. என் .டி. எல் .எவ்  வின் பொறுப்பாளர்களாக இவர்கள் இருந்தனர்..1989 டிசம்பர்  11 ம் திகதி  மாமாங்கத்தில் புலிகள் நடத்திய தாக்குதலில்  பிரசாத் கொல்லப்பட்டார்.கல்லாறு வேவி 1985 ல் சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். பின்னாளில் புளொட் மாமா ஜெர்மனி சென்றார். அங்கிருந்து சுவிஸ் சென்ற  இவர்  சுதா `(மட்டக்களப்பு) என்பவரைக்  கொலைசெய்ததுடன் சதாஅல்லது மச்சி  (சாவகச்சேரி) என்பவரை ஊனமுறச் செய்தார். இது சம்பந்தமாகச் சர்வதேசப்   பொலிசார்( INTER POL)இவரைக் தேடி வருகின்றனர். .    

தமிழகத்தில் அப்போது தங்கியிருந்த பிரபல தமிழ் அரசியல் வாதி யொருவரின் ஏற்பாட்டில்  ஈ. என் .டி. கட்டுரை 

தொடர்

எல் .எவ்  இலங்கைக்கு அனுப்பப்பட்டது. கருணா குழுவினருடன் இணைந்து புலிகளுக்கெதிராகப் போராடுவதற்கென்றே இவர்கள் வந்தனர்.  இவர்களுடன் புளொட் மாமாவும் இணைந்து கொண்டார்.

லண்டன் ரி.பி.சி என்ற வானொலி செயல்பாட்டாளர்களில்   ஒருவரும் புளொட் மாமாவின் தம்பியுமான  புவநேசன்  இலங்கைக்குச்  சென்றிருந்த வேளை  புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் .

பொதுவாக ஆயுதமேந்திய ஒருவரின் நடவடிக்கைகளின் தீவிரம் 32 வயதுவரை மட்டுமே இருக்கும். அதன் பின் மனைவி,பிள்ளைகள் என்ற சிந்தனேயே மேலோங்கும்.ஒரு இலட்சியத்துடன் ஆயுதமேந்தியவர்களுக்கு இந்தப் பொதுவான நடைமுறை பொருந்த மாட்டாது.அவர்களுக்கு வயதோ, குடும்ப உறவோ முதன்மையாயிருக்காது,ஆனால் 1989இல் இளைஞர்களாக இருக்கும் போதே புலிகளுடன் மோதமுடியாமல் தப்பியோடிய ஈ. என் .டி. எல் .எவ் வினர் கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழிந்த பின் எந்த நம்பிக்கையுடன் வந்தனரோ தெரியவில்லை.இவர்களை அனுப்பி வைத்த அந்த அரசியல் வாதிக்கும் இந்த யதார்த்தம் புரியவில்லை.

ஒப்பீட்டளவில் மிதவாதியாகக் கருதப்படும் சித்தார்த்தன் யாழ் .மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்."என்வழி தனிவழி" என்ற நிலைப்பாட்டை 2010 தேர்தலுடன் அவரும் கைவிட்டுள்ளார்.

"காலம் மாற மாற எந்த ஒரு கருத்தும் மாறிவிடும்" - அழகியபாண்டியன் ( ஒபாமா - பக்கம் 164)

"இதுதான் பாதை இதுதான் பயணம் என்று வகுத்துக் கொள்ளாதவனுக்கு எதுவும் பாதைதான். இதுதான் பயணம் என்று முடிவு கட்டாதவனுக்கு எதுவும் பயணம்தான்" - கண்ணதாசன் ( ஆயிரம் கால் மண்டபம் - பக்கம் 188)

இக் கூற்றை உறுதிப்படுத்துமாற்போல் சிலர் நடந்து கொள்கிறார்கள். மாமன், மைத்துனன் என உறவினர் மீதுள்ள பாசத்தால் அன்றைய புளொட்டினரின் செயற்பாடுகளையும் விடுதலைப் போராட்டப் பங்களிப்பு என வாதாடுகின்றனர்.அத்துடன் புதிய மன்னர்களின் கிரீடங்களை மினுக்குபவர்களாகவும்உள்ளனர்.கேட்டால் ஜனநாயகம் - கருத்துச் சுதந்திரம் என்கின்றனர்.

"ஜனநாயகம் என்பது கடவுள் மாதிரி - என்ன இலக்கணம் வேண்டுமானாலும் சொல்லலாம் சரி - தப்பு என்று யாராலும் சொல்லமுடியாது பதவிக்கு வருகின்ற ஒவ்வொரு கட்சிக்கென்று அதற்கென்றே பிரத்தியேகமான, உத்தியோக பூர்வமான புத்திசாலிகள் உண்டு இவர்கள் தான் இக்காலப் பிராமணர்கள். கட்சி செய்வதையெல்லாம் ஆதரிக்க வேண்டியது இவர்கள் கடமை - இந்திரா பார்த்த சாரதி (ஏசுவின் தோழர்கள் - பக்கம் 124-125)

இவர்களுக்கு இரு விடயங்களை நினைவூட்ட விரும்புகின்றோம்

"தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவும் இல்லை "

-              காந்திஜி ( தினமணி சிறுவர் மலர் 28/02/2015)

" மனிதனின் வயதை அவன் எத்தனை ஆண்டுகளாக இருந்து   வருகின்றான் என்று கணக்கிடுவதைக் காட்டிலும், எத்தனை ஆண்டுகள் உலகுக்குப் பயப்படுவான் என்று எதிர்காலத்தில் கணக்கிட வேண்டும் - ருடோல்ப் ஹரேன் பெர்க் ( விஞ்ஞானி )

(இயேசுவின் தோழர்கள் - இந்திரா பார்த்த சாரதி பக்கம் 233 – 234)

 மட்டு நேசன்

***

தற்போது பிரபல சித்தாந்த வாதிகளாக விளங்கும் ஞானம் (பிள்ளையானின் தற்போதைய பிரதம ஆலோசகரும், கொள்கை(?)வகுப்பாளரும்), யோகன் கண்ணமுத்து (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை புகழ்), கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் சீவரத்தினம் முதலான அப்போதைய புளொட் பிரமுகர்கள் அருள்நேசநாதனின் படுகொலை பற்றி தொடர்ந்தும் மௌனம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை