கலைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பரிசு இதுதான்-பிரதமர் மஹிந்த ராஜபக்ச

கலைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மருத்துவ உதவி விபத்துக் காப்புறுதியானது, எம்மால் வழங்கக்கூடிய சிறந்த பரிசாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கலைஞர்களுக்கான தரவுத்தளம் வெளியீட்டு விழா நேற்று (20) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது பிரதமரின் தலைமையில் தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலைகள் மற்றும் கிராமியக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் www.heritage.gov.lk உத்தியோகபூர்வ இணையத்தளம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

அதேவேளை, பிரதமரின் தலைமையில் கலைஞர்களுக்கான காப்புறுதி பத்திரம் வழங்கப்பட்டது. இதன்போது பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
"நம் நாட்டின் கலைஞர்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் தங்கள் கலைக்காக அர்ப்பணிக்கிறார்கள். அவர்கள் பணிபுரியும் துறையை மதிக்கிறார்கள். அவர்கள் தங்கள் பொருளாதாரத்தை விட கலைக்கு மதிப்பளித்தனர்.

எங்கள் அன்பிற்குரிய கலைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் இந்த காப்புறுதியானது, கலைஞர்களுக்கு எம்மால் வழங்கக்கூடிய சிறந்த பரிசு என்று நாங்கள் நம்புகிறோம்.

நம் நாட்டில் சினிமா என்பது 75 வருடங்களாக ஒரு கலையாகவே காணப்பட்டது. நீண்ட காலமாக திரையுலகில் இருக்கும் கலைஞர்களின் பொதுவான கோரிக்கை சினிமாவை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான்.

நம் நாட்டு சினிமாவை வணிக ரீதியாக மீண்டும் கட்டியெழுப்ப சினிமாவை ஒரு தொழிலாக மாற்ற வேண்டும் என்று திரையுலகினர் விடுத்த கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டோம்.

கலைஞர்களுக்கான தரவுத்தளத்தை உருவாக்குவதும் அரசாங்கமாக நாம் பெற்ற மாபெரும் சாதனையாகும்" என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.


புதியது பழையவை