நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 75ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நேற்று வரையில், 76 ஆயிரத்து 538 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ரஸ்யாவில் இருந்து 12 ஆயிரத்து 368 சுற்றுலா பயணிகள் குறித்த காலப்பகுதிக்குள் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவில் இருந்து 11 ஆயிரம் பேரும், உக்ரேனில் இருந்து 7 ஆயிரத்து 427 பேரும் பிரித்தானியாவில் இருந்து 6 ஆயிரத்து 929 சுற்றுலா பயணிகளும் இவ்வாறு நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.
இதேவேளை, ஜேர்மன், போலந்து, அவுஸ்த்திரேலியா, மாலைதீவு மற்றும் கசகஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இவ்வாறு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலாதுறை நாட்டில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அதனை அபிவிருத்தி செய்ய அரசாங்கத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பொருளாதார நெருக்கடியை நிவர்த்திக்கும் வகையிலான டொலர் தேவையை ஈடு செய்யும் ஒரு துறையாக சுற்றுலாதுறை நாட்டில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.