உணவுப் பாதுகாப்பை இலக்காக கொண்டு துரித வேலை திட்டங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.
சிறு போக பயிர்ச் செய்கை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள உணவுத் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பில்¸ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே¸ஜனாதிபதி அதிகாரிகளுக்கு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அரச மற்றும் தனியார் துறையினர் இணைந்து, விரிவான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக சர்வதேச நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியத்துள்ளதாகவும், இதனால் உரத் தட்டுப்பாடு அல்லது வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டு, சிறுபோக பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், உரத்தை இறக்குமதி செய்தல், விநியோகித்தல், முகாமைத்துவம் செய்தல், தெளிவுபடுத்தல் மற்றும் விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்பினை ஏற்படுத்துதல் ஆகிய விடயங்களை சிறந்த முறையில் மேற்கொள்ள, தேசிய உரக் கொள்கையொன்றை விரைவாக தயாரிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாயிகளின் விருப்பத்திற்கு அமைய, இரசாயண அல்லது இயற்கை உரத்தைப் பயன்படுத்தி, பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விவசாய அமைச்சு முழு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
பயறு, கௌபி, சோயா உள்ளிட்ட அத்தியவசிய பயிர்களை நடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, விவசாயிகளுக்கு உயர்ந்தபட்ச இலாபத்தைப் பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
மேலும், அரசாங்கத்திற்கு சொந்தமான பயிரிப்படாத நிலங்களைக் கண்டறிந்து, அவற்றை இளம் விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கெள்ள வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பால், முட்டை, கோழி இறைச்சி என்பவற்றின் விலையினைக் கட்டுப்படுத்துவதற்கு, மிருகங்களுக்கான உணவினை பெற்றுக் கொடுப்பது குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
