உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டு வந்த 51 பேரையும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரானின் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்குப் பயிற்சிக்காகச் சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலும் காத்தான்குடியை சேர்ந்தவர்கள் சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 69 பேரைக் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸார் வழக்கு தாக்கல் மேற்கொண்டனர்.
இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இதில் சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், ஆகியோரது வழக்குகள் நீதவான் நீதிமன்றிலிருந்து உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதுடன், 5 பேர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
அத்துடன் 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து 51 பேர் தொடர்ந்தும் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அநுராதபுரம், கேகாலை, பதுளை, திருகோணமலை போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
நாட்டில் பல்வேறு சிறைச்சாலைகளில் உள்ளவர்களை தற்போதைய நாட்டின் சூழ்நிலை காரணமாக அழைத்து வராத நிலையில், மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலர் மாத்திரம் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் 51 பேரையும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
