விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து துணை இராணுவ குழுவாக செயற்பட்டு, தற்போது அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கடத்தல்கள், படுகொலைகள் உள்ளிட்ட பல உள்வீட்டு ‘அதிர்ச்சி தகவல்களை’ விடயமறிந்த ஒருவர் வெளிப்படுத்தியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோளிட்டு கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு அச்சம் காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவரே இந்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய தகவல்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜொசெப் பரராஜசிங்கம், ந.ரவிராஜ் உள்ளிட்டவர்களின் கொலைகள், பத்திரிகையாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தல் காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட தகவல்களை அவர் வெளிப்படுத்தியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களை ஐ.நா அதிகாரிகளிடம் வாக்குமூலமளித்துள்ளார். ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடம் இவர் சில நாட்களாக வழங்கிய தொடர் வாக்குமூலத்தில், இலங்கையில் நடந்த பல கொலை, தாக்குதல்களின் சூத்திரதாரிகளை அம்பலப்படுத்தியதாக தெரிய வருகிறது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் இந்த பிரமுகர், கொழும்பிலும் வெளிநாட்டிலும் உள்ள சில முக்கிய இராஜதந்திர தூதரகங்களுக்கு தம்மிடம் உள்ள தகவல்களின் சுருக்கமான விவரங்களைக் கடிதமாக எழுதியிருந்தார்.
இதையடுத்து, அவர் வெளிநாடொன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தகவலறிந்தவர் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் பிறவற்றுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பான வாக்குமூலங்களை வழங்கியதாக ஆதாரங்கள் வெளிப்படுத்தியுள்ளன” என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐநா அதிகாரிகள் சுமார் 5 நாட்களுக்கு தகவல் அளித்தவரிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் ஆகியோரின் கொலை மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களை அந்த நபர் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்த கொலைகள் பற்றிய விவரங்களையும் தகவல் கொடுத்தவர் வெளிப்படுத்தியிருந்தார்.
ஐ.நா மற்றும் இராஜதந்திரப் பணிகளுக்கு வெளிப்படுத்திய தகவல்கள் முன்னாள் ஆட்சியுடன் தொடர்புடைய சில நபர்களை உள்ளடக்கிள்ளதாக தெரிய வந்துள்ளது.
